அமெரிக்க குழந்தைக்கு நன்றி தெரிவித்து இங்கிலாந்து மகாராணியார் கடிதம்; திக்குமுக்காடிப்போன தாயும் மகளும்!

 

அமெரிக்க குழந்தை ஒன்று, ஹாலோவீன் பண்டிகையின்போது இங்கிலாந்து மகாராணியாரப்போலவே அச்சு அசலாக உடை உடுத்தியிருந்தாள்.

அந்த விஷயம் மகாராணியாரை நெகிழவைத்ததைத் தொடர்ந்து, ஹாலோவீன் பண்டிகையின்போது தன்னைப்போல உடை உடுத்தியதற்காக நன்றி தெரிவித்து அந்தக் குழந்தைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மகாராணியார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் ஹாமில்டன் நகரை சேர்ந்த ஜலேன் சதர்லேண்ட் (வயது 1), ஹாலோவீன் பண்டிகையின்போது, இங்கிலாந்து மகாராணியாரைப் போலவே உடை உடுத்தி வலம் வர, அவளைப் பார்த்தவர்கள், தலைகளைத் தாழ்த்தி, மகாராணியார் வாழ்க என்று வாழ்த்தியிருக்கிறார்கள்.

இந்த காட்சிகளை புகைப்படம் எடுத்த குழந்தையின் தாய் கேட்லின் சதர்லேண்ட், ஒரு கடிதம் எழுதி, அதனுடன் இந்த புகைப்படங்களையும் இணைத்து, அவற்றை பக்கிங்காம் அரண்மனைக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஆனால், மகாராணியாரிடமிருந்து தனக்கு கடிதம் வரும் என அவர் கொஞ்சமும் நினைக்கவில்லை. அந்த புகைப்படங்களைப் பார்த்த மகாராணியார், கேட்லினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், கேட்லின் தனக்கு கடிதம் எழுதியதற்காக நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள மகாராணியார், ஜலேனின் புகைப்படம் தன்னை மகிழச் செய்ததாக தெரிவித்துள்ளதுடன், ஜலேன் குடும்பத்துக்கு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

மேலும், அந்த புகைப்படங்களில் ஜலேன் நாய்க்குட்டிகளுடன் இருப்பதையும் கவனிக்கத் தவறவில்லை மகாராணியார். ஆகவே, தனது செல்லப்பிராணிகளான நாய்கள் குறித்த சில தகவல்களையும் ஜலேனுக்காக அனுப்பிவைத்துள்ளாராம் அவர்.

மகாராணியாரின் கடிதம் கண்டு, தாயும் மகளும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள்..