மைக்ரோசாப்ட் நிறுவனம் மீது சீனா சைபர் தாக்குதலா..?

 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மீது மிகப்பெரிய அளவில் சைபர் தாக்குதல் நடத்தியதாக சீனா மீது அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ‘மைக்ரோசாப்ட் எக்ஸ்சேஞ்ச்’ எனப்படும் பிரபல இ-மெயில் தளத்தை சீன அரசின் உதவியோடு ஹேக்கர்கள் ‘ஹேக்’ செய்ததாகவும், இதன் மூலம் சுமார் 30 ஆயிரம் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டதாகவும் வல்லரசு நாடுகள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், சீனாவின் வெளியுறவு அமைச்சகம் உலகளாவிய ஸ்திரத்தன்மையும், பாதுகாப்பையும் குறை மதிப்புக்கு உட்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் வழக்கம் போல் சீனா இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சீன அரசாங்கம் இணைய பாதுகாப்பின் தீவிர பாதுகாவலராக விளங்குகிறது. சீனா மீதான இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை மற்றும் பொறுப்பற்றது.‌ ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை கூறுவது தீங்கிழைக்கும்” என‌ கூறப்பட்டுள்ளது.