வளர்த்தவரின் மடியில் உயிர் விட்ட கொரில்லா..!

 

14 ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக மீட்கப்பட்ட கொரில்லா, தன்னை வளர்த்த வனத்துறை அதிகாரியின் மடியிலேயே உயிரை விட்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

இந்த பூங்காவில் பணியாற்றி வரும் மேத்திவ் சமாவு, ஆண்ட்ரே பவுமா ஆகியோர் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர், கடத்தல்காரர்களால் தாய் கொரில்லா சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் தனியாக தவித்துக்கொண்டிருந்த அதன் குட்டிகளை மீட்டு வந்து பூங்காவில் வளர்த்து வந்தனர்.

நடாகாஷி மற்றும் மடாபிஷி எனும் பெயரிட்டு வளர்க்கப்பட்ட அந்த குட்டிகளுடன் விதவிதமாக ‘செல்ஃபி’ எடுப்பதை ஆண்ட்ரே பவுமா வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருடைய இந்த செல்ஃபி பழக்கம் குட்டிகளுக்கும் தொற்றிக்கொண்டது.

ஆண்ட்ரே பவுமா செல்போனை கையில் எடுத்தாலே போதும், அந்த 2 கொரில்லாக்களும் வேகமாக ஓடி வந்து மனிதர்களைப் போலவே போட்டோவுக்கு வித விதமாக ‘போஸ்’ கொடுக்கத் தொடங்கிவிடும்.

கடந்த 2019ம் ஆண்டு, அந்த கொரில்லாக்களுடன் எடுத்துக்கொண்ட ‘செல்ஃபி’ படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார் ஆண்ட்ரே பவுமா. இதை ஆச்சரியத்துடன் பார்த்த மக்கள், அந்தப் படங்களை அதிக அளவில்  பகிரத் தொடங்கினர். இதையடுத்து அந்த ‘கொரில்லா செல்ஃபி’ படம் உலகம் முழுவதும் பரவியது.

இந்த கொரில்லாக்களை தங்களுடன் வைத்து அரவணைத்து பாசத்துடன் பராமரித்து வந்த அதிகாரிகள், அதனுடன் கொஞ்சுவது, விளையாடுவது என மகிழ்ச்சியாக இருந்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரில்லா நடாகாஷியின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

கால்நடை மருத்துவர்கள் அதற்கு எவ்வளவோ சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், சிகிச்சை பலனின்றி கடந்த 26-ம் தேதி, தன்னை வளர்த்து பாதுகாத்த ஆண்ட்ரேவின் மடியிலேயே நடாகாஷி உயிரிழந்தது.

இந்த செய்தியை விருங்கா தேசிய பூங்கா வெளியிட்டுள்ளது. இந்த செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன், தனது நண்பனின் மரணத்தால் மடாபிஷியும் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.