கிரிப்டோ கரன்சிகளை சொந்தமாக வைத்திருக்கவில்லை... ஆனால், விருப்பம் உள்ளது - சுந்தர் பிச்சை

 

கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை கிரிப்டோ கரன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் முன்னோடியான ஆல்பபெட் நிறுவனம் ஆகியவற்றின் தலைமை அதிகாரியான சுந்தர் பிச்சை தான் கிரிப்டோ கரன்சி ஏதும் சொந்தமாக வைத்திருக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சென்னையை பூர்வீகமாக கொண்ட சுந்தர் பிச்சை கரக்பூர் ஐ.ஐ.டியில் இன்ஜினியரிங் பயின்றவர். உலகப் புகழ் பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பயின்றவர். அமெரிக்காவின் பென்னிசில்வேனியாவில் இருக்கும் பழம்பெருமை வாய்ந்த  வேர்ட்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏ பட்டத்தை பெற்றவர். இத்தகைய பெருமை மிக்க சுந்தர் பிச்சை அவர்கள் கிரிப்டோ கரன்சி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ப்ளூம்பெர்க் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ‘கிரிப்டோ கரன்சி முதலீடுகள் குறித்து நான் பரிசோதனை நடத்தி உள்ளேன்’ என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.  

‘நான் கிரிப்டோ கரன்சிகளை சொந்தமாக வைத்திருக்கவில்லை. ஆனால், சொந்தமாக்கி கொள்ள விருப்பம் உள்ளது’ என்றும் கூறியுள்ளார்.

பிட்காயின் தான் உலகின் மதிப்புமிக்க கிரிப்டோ கரன்சியாக உள்ளது. தற்போதைய சூழலில் 60 ஆயிரம் டாலர்கள் எனும் அளவில் பிட்காயின் விற்பனை செய்யப்படுகிறது.

இதில் முதலீடு செய்தவர்கள் நடப்பாண்டில் அவர்களுடைய முதலீடு இரட்டிப்பாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கிரிப்டோ கரன்சி சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாக அதில் முதலீடு செய்துள்ள இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாகும் அளவுக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் ஆழமான பிரச்சினைகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சமீபத்தில் கவலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.