மூச்சுக்கு முந்நூறு முறை ‘முருகா’ எனச் சொன்னால் என்னவாகும் தெரியுமா?

முகம் என்பது நம்மை உலகத்தோடு இயங்கவைக்கும் ஒரு முக்கியமான உறுப்பாகும். இதனைக் கொண்டே நாம் பற்பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாகப் புன்னகை, அழுகை, சிரிப்பு, கோபம், வெறுப்பு, உவப்பு, ஏளனம், அவமானம், உதாசீனம், எரிச்சல், அமைதி, பொறுமை, பெருந்தன்மை ஆகிய பற்பல உணர்வுகளை மனம் நினைப்பதை அப்படியே கண்ணாடியைப் போலக் காட்டிவிடுகிறது முகம். மனத்தின் ஓட்டத்தினை அவ்வளவு விரைவாக முகம் எப்படி எதிரொலிக்கிறது? அதற்கு முக்கியக் காரணம் முகத்தில் பரவியுள்ள நரம்புகளும், அவற்றோடு இசைந்து இயங்கும் தசைகளுமே
 

 முகம் என்பது நம்மை உலகத்தோடு இயங்கவைக்கும் ஒரு முக்கியமான உறுப்பாகும். இதனைக் கொண்டே நாம் பற்பல செயல்களைச் செய்கிறோம். உதாரணமாகப் புன்னகை, அழுகை, சிரிப்பு, கோபம், வெறுப்பு, உவப்பு, ஏளனம், அவமானம், உதாசீனம், எரிச்சல், அமைதி, பொறுமை, பெருந்தன்மை ஆகிய பற்பல உணர்வுகளை மனம் நினைப்பதை அப்படியே கண்ணாடியைப் போலக் காட்டிவிடுகிறது முகம். மனத்தின் ஓட்டத்தினை அவ்வளவு விரைவாக முகம் எப்படி எதிரொலிக்கிறது? அதற்கு முக்கியக் காரணம் முகத்தில் பரவியுள்ள நரம்புகளும், அவற்றோடு இசைந்து இயங்கும் தசைகளுமே ஆம். நம் முகத்தில் சுமார் 21 தசைத் தொகுதிகள் உள்ளன. இவற்றினூடே ஆறு பெரும் நரம்புத் தொகுதிகள் செல்கின்றன. அவற்றுள் முக்கியமான நரம்புத் தொகுதி வாய், மூக்கு, நெற்றி, கன்னப் பகுதிகளில் ஊடுருவிக் காணப்படுகிறது. இவற்றினுள்ளும் வாய் நரம்புக் கிளைகளே (buccal branch) நமது முகபாவங்களை வெளிக்காட்டுவதில் பெரும்பங்காற்றுகின்றன.

இந்த நரம்புகளும், தசைகளும் சரியாக இயங்கினால்தான் நம்மால் பேசுதல், உணவை மெல்லுதல், உணர்வுகளை முகம் வழியே காட்டுதல் போன்ற செயல்பாடுகளைச் சரிவரச் செய்ய இயலும். முகவாதம், பக்கவாதம் போன்ற நோய்களின்போது இத்தகைய நரம்புகள் செயலிழந்து/வலுக்குறைந்து போய்விடுகின்றன. அப்போது இத்தசைகளை இயக்குவது கடினமாகிவிடும். அதனால்தான் வாத நோய்கள் தாக்கும் அறிகுறி தென்பட்டவரது புன்னகை, மற்றும் கன்னத்தைக் காற்றைக் கொண்டு உப்புதல் போன்றவற்றைச் செய்து பார்ப்பது அவசியம். ஏனென்றால் இவை சட்டென்று நரம்புச் செயலிழப்பைக் காட்டிக் கொடுத்துவிடும் அசைவுகளாம்.

வளர்ச்சிக்கான இளம் வயதைக் கடந்துவிட்ட பிறகு நடுவயதைத் தாண்டுபவர்களுக்கு ஒவ்வொரு தசையும், நரம்புமே நாட்பட நாட்படத் தமது செயற்பாடுகளைச் சுருக்கிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். எனவேதான் பல்விதமான நோய்கள் வயது முதிர்வின் காரணமாகத் தோன்றுகின்றன. சரியான பயிற்சிகளின் மூலம் இக்குறைபாடுகளை நாம் ஓரளவேனும் போக்கிக் கொள்ள முடியும். எவ்வாறு உடற்பயிற்சிகளால் உடலுறுப்புக்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமோ, எவ்வாறு மூச்சுப் பயிற்சியால் நமது சுவாசத்தையும், மனதையும் காத்துக்கொள்ள முடியுமோ அவ்வாறாகவே முகத்தில் இருக்கும் தசைகளையும், நரம்புகளையும் நாம் வாயின், நாவின், உதடுகளின் அசைவுகளைக் கொண்டு பாதுகாத்துக் கொள்ள முடியும். இதற்கான பயிற்சி முறைகளையே நாம் உச்சாடாணங்கள் என்று அழைக்கிறோம். உச்சரிப்பின் மூலம் பெறப்படும் பயிற்சிகள் என்பதால் இவற்றை இவ்வாறு அழைக்கிறோம். மேலும் நமது உச்சி (சிரம்) இதன் மூலம் வலுப்பெறுகிறது என்பது மேலுமொரு பொருளாக இருக்கலாம்.

ஓம் என்ற உச்சாடாண மந்திரத்தை எடுத்துக்கொண்டால், முதலில் காற்றை மூக்கின் வழியே உள்ளிழுக்கிறோம். அப்போது வயிறு, நடுமார்பு, மேல்மார்பு என்று ஒவ்வொரு பகுதியாகக் காற்றை மேல்நோக்கி நிரப்புகிறோம். பிறகு வாயினைத் திறந்து ஓ என்று சொல்ல ஆரம்பிக்கிறோம். அப்போது வாயின் வழியாகவே பெரும்பாலான காற்று வெளியேறும். நீண்ட ஓ என்ற ஒலிக்குப் பிறகு வாயினை மூடும்போது ம் என்ற சத்தம் பிறக்கிறது. அப்போது மூக்கின் வழியே காற்று வெளியேற ஆரம்பிக்கிறது. காற்றினை எவ்வளவு வெளியேற்ற முடியுமோ அவ்வளவு வெளியேற்றியபின்னர் அடுத்த சுற்றுக்காக, மீண்டும் காற்றை உள்ளிழுக்க ஆரம்பிக்கிறோம். இவ்வாறு மெதுவாக மூச்சு விட்டு ஓதும்போது நம்மால் மூச்சினை மெதுவாக இழுக்கவும், விடவும் முடிகிறது. இதன் மூலம் ஒரு நிமிடத்துக்குச் சுமார் 15 முறை நடக்கும் சுவாசமானது சுமார் 6,7 எனக் குறைந்துவிடும், அதற்குக் கீழும் குறைக்கலாம். இதுவே மூச்சினையும் உச்சாடாணத்தையும் இணைக்கும் முறையாகும்.

முருகா என்பது தமிழர்களின் முக்கியமான குறியீடுகளில் ஒன்றாகும். கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாத சுவாமிகள் ‘மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்’ என்பார். முருகா முருகா என்று பன்முறை தொடர்ந்து உச்சரித்துப் பார்த்தால் நம் முகத்திலுள்ள தசைகளும், நரம்புகளும் ஆட்டுவிக்கப்படுவதைப் பார்க்க முடியும். தாடை, கன்னம், நெற்றி, மூக்கு என்று அனைத்து தசைத் தொகுதிகளும், அவற்றோடு தொடர்புடைய நரம்புகளும் முருகா முருகா என்று தொடர்ந்து உச்சரிக்கும்போது தூண்டப்படுகின்றன.

கூடவே முகத்தில் குருதி ஓட்டமும், நிணநீர் ஓட்டமும் இதன் விளைவாகத் தூண்டப்படுகின்றன. இவற்றோடுமட்டுமல்லாது மூச்சினைக் கட்டுப்படுத்தி நீண்ட நேரம் இழுக்கவும், அதனைக் கட்டுப்பாட்டுடன் வெளியிடவும் இப்பயிற்சி உதவி நமது நுரையீரலை வலுவடையச் செய்கிறது. இதனை ஒரு முறை சொல்வதோடல்லாமல் ஒரே மூச்சில் பலமுறை ஓதுவதால் இத்தகைய உடலியல் வினைகள் சீருடன் நடைபெறுகின்றன. இதனைச் சத்தமின்றியும் மூச்சுடன் ஒன்றுபடுத்தி வாயசைப்பின் வழியே மட்டுமே ஓதவும் முடியும். முயன்று பாருங்களேன்.

சிலருக்கு முருகா என்பது தமிழ் மரபைத் தாண்டி ஒரு மதச் சார்புடைய மந்திரமாகத் தோன்றலாம். அவர்களும் மூச்சுப்பயிற்சியினை ஓதுதலின் மூலம் பெற நிறைய வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் ஒன்றுதான் திருக்குறள் மறையினை ஓதுதல். இம்முறையில் ஒரு குறளை ஒன்று அல்லது இரண்டு மூச்சுகளில் முழுதுமாக மறையோதும் பண்ணில் ஓதவேண்டும். இதனை 2009 ஆம் ஆண்டு பனைநிலத் தமிழ்ச் சங்கத்தில் ‘திருக்குறள் மறைமொழி’ என்ற பெயரில் ஒலிப்பதிவாக வெளியிட்டோம். இவற்றை நீங்கள் https://maraimozhi.wordpress.com/ என்ற தளத்தில் சென்று கேட்டும், அதன் வழியே யூடியூப் தளத்திலும் பார்க்கலாம்.

நமது தமிழ் மரபில் பல்வேறு வகையான ஓதும் முறைகள் இருக்கின்றன. தமிழிசையைப் பாடுவதும் பிராணாயாமம் செய்வதற்கு ஒப்பானதே. ஏழு சுரங்களைப் பாடுவதும் மூச்சிற்கும் மனதிற்கும் சிறந்த பயிற்சியே. சரளி வரிசையைக் கற்றுக்கொள்ளும்போது முதல், இரண்டாம், மற்றும் மூன்றாம் காலங்களில் வேகத்தைக் கூட்டிப் பாடக் கற்றுக் கொள்கிறோம். இவற்றை மூச்சின் அசைவோடு இணைத்துப் பாடும்போது மிகச் சிறந்த உடற்பயிற்சியும், மனப்பயிற்சியும் கிடைக்கிறது.

ஒவ்வொரு மதத்திற்குள்ளும், அல்லது மதம் சாராத வழக்கங்களுக்குள்ளும் ஓதுவதற்கான முறைகள் இருக்கின்றன. இவற்றை ஓதுவதால் மூச்சுக்குப் பயிற்சியும், மனதிற்குப் பயிற்சியும், மேலும் ஓதும்போது சுரக்கப்படும் உமிழ்நீரில் அடங்கியுள்ள வேதிப் பொருட்களால் நம் உடலிலும் மனதிலும் நலம் பெருகும். இதற்காகத்தான் ஓதுவது ஒழியேல் என்றார் ஔவையார். நம்மிடையே வழக்கத்தில் இருக்கும் சில ஓதும் முறைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் சில புதுமைகளையும் சேர்த்து ‘Chanting Is Pranayama’ என்றவொரு ஒலிப்பதிவை அண்மையில் வெளியிட்டுள்ளோம். இதனைப் பல்வேறு இசைத் தளங்களிலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம். ஓதுவோம், உயர்வோம்!

– முனைவர். சுந்தர் பாலசுப்ரமணியன், பிஎச்.டி

குறிப்பு : கட்டுரையாளர் முனைவர் சுந்தர் பாலசுப்ரமணியன் அமெரிக்காவின் சார்ள்ஸ்டன் தென்கரோலினா மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். திருமூலரின் திருமந்திரம் உட்படப் பல்வேறு சித்தர் பாடல்களிலுள்ள மூச்சுப் பயிற்சி முறைகளில் மருத்துவ ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர் டாக்டர் சுந்தர் பாலசுப்ரமணியன். இவரது ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகத் தரம் வாய்ந்த அறிவியல் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. பல்வேறு தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பேட்டிகளை அளித்தும், உலகளாவிய அளவில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தியும், உரையாற்றியும் மூச்சுப் பயிற்சி முறைகளின் அடிப்படை அறிவியலைப் பரப்பி வருகிறார்.