விழாக்கள் மட்டுமே போதுமா? காலமாற்றத்திற்கேற்ப புதிய சிந்தனைகள் தமிழ் மன்றத்திலும் வேண்டுமல்லவா!

 

சான் ஃப்ரான்சிஸ்கோ வளைகுடா தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்தல் வரும் வியாழன் நள்ளிரவு முதல் சனிக்கிழமை நண்பகல் வரையில் இணையவழியாக நடைபெற உள்ளது. மொத்தம் இரண்டு பெண்கள் உட்பட 14 பேர் போட்டியில் உள்ளனர். ஒவ்வொரு போட்டியாளரும் தாங்கள் இதுவரையிலும் தமிழ் சமூகத்திற்கும், தமிழ் மன்றத்திலும் என்னென்னெ செய்துள்ளோம், இனி என்னென்ன செய்யப் போகிறோம் என்ற வாக்குறுதிகளை அளித்து வருகிறார்கள்.

ஐடி துறையில்  வல்லுனராக பணியாற்றி வரும் உதயபாஸ்கர் நாச்சிமுத்து, தன்னுடைய தமிழ் மொழிப் பற்றையும், தமிழ் மன்றத்தில் செய்துள்ள பணிகளையும் பட்டியலிட்டுள்ளார். மேலும் காலமாற்றத்திற்கேற்ப புதிய சிந்தனைகளுடன் தமிழ் மன்றத்தின் செயல்பாடுகள் விழாக்களைக் கடந்து மேலும் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்றும் அதற்கான செயல்திட்டங்களையும் முன்மொழிந்துள்ளார். இது குறித்து உதயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு,

“வளைகுடாப்பகுதித் தமிழ்மன்றத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம். என் பெயர் உதயபாஸ்கர் நாச்சிமுத்து. வளைகுடாப்பகுதியில்  ஐடி துறையில் Security architect-ஆக பணியாற்றிவருகிறேன்.

தமிழ் மீது தீராக்காதல் இருந்தாலும் தமிழ்மன்றத்தின் விழுதுகள் இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்று பணிபுரிந்தபோது, முனைவர் வி.எஸ்.ராஜம் அம்மா, சங்க இலக்கியத்தின் மேற்கணக்கு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வைதேகி அம்மா போன்ற தமிழறிவு மிக்க சான்றோர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே, தமிழின் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்களை படித்து உணரும் வாய்ப்பைக் கொடுத்தது.

தமிழ்மன்றத்தின் விழுதுகள் இதழுக்கு மூன்றாண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறேன். அதன்மூலம், சங்க இலக்கியம், திருக்குறள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழறிஞர்கள் பற்றிய கட்டுரைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம். அமெரிக்கத் தமிழர்களை புதிய எழுத்தாளர்களாக  அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அடுத்த தலைமுறைத் தமிழ் குழந்தைகளின் சாதனைகளை நேர்காணலாக வெளியிட்டிருக்கிறோம்.

தமிழ்மன்றத்தின் மேடையில் வேள்பாரி நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்ற திரைக்கதை உருவாக்குவதில் பங்கெடுத்து, உரையாடல் எழுதிக் கொடுத்திருக்கிறேன். இவை தவிர, மன்றத்தின் TCC Bylaw குழுவிலும், IndiaTEAM-லும் பணியாற்றியிருக்கிறேன். திருக்குறள் பற்றியும், தமிழ் பற்றியும் பல இடங்களில் சொற்பொழிவாற்றியிருக்கிறேன்.

இந்தமுறை தமிழ்மன்றத்தேர்தலில் செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுகிறேன். ஒருவேளை பணியாற்றிட வாய்ப்பு கிடைத்தால், செயற்குழுவில் இடம்பெறுவது இதுவே முதன்முறையாக இருக்கும்.

இந்த மன்றம் நாற்பதாண்டுகால வரலாறு கொண்டது. தமிழகத்தின் முதல்வர் தொழில்முனைவோரை ஊக்குவித்து, தமிழ்நாட்டில் முதலீடுகளை அதிகரிக்க வளைகுடாப்பகுதிக்கு வருகை தந்தபோது, இந்தியத் தூதரகம் அணுகிய நிறுவனம் நம் தமிழ்மன்றம். இந்தளவு வளைகுடாப்பகுதித் தமிழர்களின் தனித்த அடையாளமாக திகழும் மாண்புகொண்டது, தமிழ் என்ற குடைக்குள் இயங்குகின்ற நம் தமிழ்மன்றம். 

கடந்த முப்பதாண்டுகளில் வளைகுடாப்பகுதியில் தமிழர் எண்ணிக்கை பெருகியுள்ளது. அடுத்த தலைமுறை வளர்ந்துகொண்டு வருகிறது. தமிழ்மன்றத்தின் தன்னார்வலர்கள், பொறுப்பேற்க முன்வருபவர்கள் என்று எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. அதற்கேற்றவாறு, தமிழ்மன்றத்தின் நோக்கமும் செயல்பாடும் மாற்றியமைக்கப்படவேண்டிய தேவையுள்ளது.

விழாக்கள் மட்டுமே தமிழ்மன்றத்தின் நோக்கம் என்பது போன்ற மாயத்தோற்றம் மாற்றப்படவேண்டிய தேவையும் உள்ளது. 

இவையெல்லாம் Bylaw-வில் முறைப்படுத்தப்படவேண்டும். VP Cultural என்ற ஒரே பொறுப்பாக இல்லாமல், விழா, இலக்கியம்,  அறிவியல் தொழில்நுட்பம், உடல்நலம் (Health/Sports), ஆதரவு மையம் (Emergency/Support ) போன்ற புதிய பொறுப்புகளுக்கு தனித்தனியாகத் தலைமை வகுக்கப்படவேண்டும். இதன்மூலம், புதியவர்களுக்கு, அடுத்த தலைமுறை இளைஞர்களும் செயற்குழுவில் பணியாற்ற முன்வரும் சூழலை உருவாக்கமுடியும். காலமாற்றத்திற்கேற்ப, புதிய சிந்தனைகள் பாய்ச்சப்பட்டு, மன்றம் புதுப்பொலிவுடன் எழும் சூழலை உருவாக்க முடியும்.

4500 ஆண்டுகால சமூகத்தில் வேறுபாடுகள் தவிக்கமுடியாதவை. அவை அறிவார்ந்த வேறுபாடுகளாக இருக்கும்வரை நன்மையே பயக்கும். ஆனால், உணர்வார்ந்த வேறுபாடுகள் கேட்டையே விளைவிக்கும். 1800 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் உணர்வார்ந்த வேறுபாடுகள் இருந்ததை கிபி 2ஆம் நூற்றாண்டின் மணிமேகலை பேசுகிறது.

ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள்
பட்டிமண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்!
பற்றா மாக்கள் தம்முடன் இருப்பினும்
செற்றமும் கலகமும் செய்யாது அகலுமின்!

“தாங்கள் சார்ந்திருக்கும் சமயத்தின் தத்துவவாதிகள், அறிவார்ந்தவர்கள் பங்குபெறும் பட்டிமண்டபத்தின் மாண்பை அறிந்து பண்போடு நடந்துகொள்ளுங்கள். தங்களின் கருத்துக்களை அவையோர் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் கைகலப்பும் வாய்சண்டையும் செய்யாது அகலுங்கள்,” என்கிறது இந்தப்பாடல். இது வேற்றுமைகளைக் களைந்து பட்டிமண்டபத்துக்குள் வாருங்கள் என்று அரசன் முரசறிவிக்கும் பாடல். இன்றும் அது தமிழ்மன்றத்திலும் தொடர்வதைக் காண்கிறோம். 

தமிழ்ப் பண்பாட்டு மையத்தை விரைவில் அமைப்பதன் மூலம், அவரவர் நம்பிக்கைளின் அடிப்படையில் பிரிந்து நிற்கும் தமிழர்கள் ஒன்றாய் இணைக்கமுடியும். இவ்வாறு, மாற்றியமைக்கப்படுவதன் மூலம் வளைகுடாப்பகுதியின் தமிழ்ச்சமூகம் தானாக வலிந்து வந்து உறுப்பினர்களாகச்சேரும் நிலை ஏற்படும். சமநிலையும் உருவாகும்.

மேற்கண்ட திட்டங்களைச் செயல்படுத்த உழைப்பதுடன், உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கிச் சீர்தூக்கி, தமிழ்மன்றத்தின் அடுத்தகட்ட நகர்வுக்கு உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து என்பது வள்ளுவர் கூற்று. கைகூடுமா இல்லையா என்ற அவநம்பிக்கை கொள்ளாமல், நம் குறிக்கோள் உயர்வான குறிக்கோளாகவே இருக்கட்டும்




சிந்தித்து வாக்களித்து, மன்றத்தின் செயற்குழுவில் பணியாற்ற வாய்ப்பளியுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்,” என்றுகோரிக்கை விடுத்துள்ளார் உதயபாஸ்கர் நாச்சிமுத்து.

வளைகுடா தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிடும் தன்னார்வலர்கள், தங்கள் வாக்குறுதிகளை எழுத்துப் பூர்வமாகவும், வீடியோ வடிவிலும் வெளியிட்டு வருகின்றனர். நியமன அடிப்படையில் இல்லாமல், தமிழ் மன்றத் தேர்தல் வெளிப்படையாகவும், ஜனநாயக முறையிலும் நடைபெறுவது வரவேற்கதக்கதாகும்.

A1TamilNews