ஈஸ்டர் தினத்தில் இலங்கையில் குண்டுவெடிப்பு – 130 பேர் பலி… 250 பேர் காயம்!

கொழும்பு: இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதுவரை இதில் குறைந்தது 130 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்புவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்கள், பொது இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். அப்போது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு
 

கொழும்பு: இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதுவரை இதில் குறைந்தது 130 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்புவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்கள், பொது இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

அப்போது கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொழும்புவில் குறைந்தது 50 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்புவில் குறைந்தது 55 பேர் வரை உயிரிழந்தக்கலாம் என்று அங்கிருக்கும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

காயமடைந்துள்ள பலரும் சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள்.

குண்டுவெடிப்பு குறித்த விசாரணைக்கு அனைத்து பாதுகாப்புப் பிரிவு அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு தொடர்பாக பகிரப்படும் போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்பு குறித்த அவசரக் கூட்டம் கூட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்று இலங்கை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்தார். கொழும்பு கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காயமடைந்த பலரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பாதையில் சோதனைகளும் இடம்பெறும். அத்துடன் பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.