சேவை கட்டணத்தை செலுத்தவில்லை.. பிளே ஸ்டோரில் திடீரென நீக்கப்பட்ட ஆப்ஸ்!

 

சேவை கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறி 10 நிறுவனங்களின் செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோர் அதிரடியாக நீக்கியுள்ளது.

தொழில்நுட்ப உலகத்தை கட்டி ஆண்டு வரும் கூகுள் நிறுவனத்தின் மற்றொரு தொழில்நுட்பம்தான் ஆண்ட்ராய்டு இயங்குதளம். உலகம் முழுவதும் பல கோடி செல்போன்களை இந்த இயங்குதளத்தின் மூலமாகவே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான செயலிகளை பதிவிறக்கம் செய்வதற்காக கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோர் என்ற தளத்தை வைத்திருக்கிறது. அதில் அனைத்து விதமான ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் கேம்கள் நிறைந்துள்ளன.

இந்த செயலிகள் மூலமாக உலகம் முழுவதும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் நடந்து வருகிறது. இணைய வழி மார்க்கெட்டிங் தொடங்கி, வங்கி செயலிகள் வரை அனைத்தும் இதில் நிறைந்துள்ளன. இதை நம்பி பல லட்சக்கணக்கான சிறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் அனைத்து வகையான தொழில்களையும் டிஜிட்டல் மயமாக்கி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க இதுபோன்ற செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தான் கூகுள் நிறுவனம் இந்திய நிறுவனங்களுக்கு தூக்கி வாரி போடும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. ஆம், ப்ளே ஸ்டோரில் இருந்து 10 இந்திய செயலிகளை நீக்குவது தான் அந்த அறிவிப்பு. இந்த 10 செயலிகளுமே அதிக அளவில் மக்கள் மத்தியில் பிரபலமான செயலிகளாகும். குறிப்பாக பாரத் மேட்ரிமோனி, ஷாதி.காம், குக்கூ எஃப்.எம், நாக்ரி, சிக்ஸா, 99 ஏக்கர்ஸ்.காம், உள்ளிட்ட செயலிகள் இதில் அடக்கம்.

இந்த செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியதற்கான காரணம் என்ன? என்று பார்த்தால் அந்த நிறுவனங்கள் சேவை கட்டணத்தை செலுத்தவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செயலிகளிடம் கூகுள் நிறுவனம் சேவை கட்டணமாக 11 முதல் 26 சதவீதம் வரை கட்டணம் வசூலித்து வந்த நிலையில், இந்த சேவை கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறி 10 நிறுவனங்களின் செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் அளித்திருந்த விளக்கத்தில், “நீதிமன்றங்களோ விசாரணை அமைப்புகளோ நாங்கள் கட்டணம் வசூலிக்க உள்ள உரிமையை தடை செய்யவோ ரத்து செய்யவோ இல்லை. எங்களுக்கு தரவேண்டிய உரிமையான கட்டணத்தை கேட்டும் இதுவரை வழங்காத 10 பிரபல இந்திய நிறுவனங்களின் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி இருக்கிறோம். மூன்று ஆண்டுகளுக்கு மேல் தவணை வழங்கியும் இந்த நிறுவனங்கள் தாங்கள் செலுத்த வேண்டிய சேவை கட்டணத்தை வழங்காத காரணத்தாலேயே அவற்றின் செயலிகள் நீக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த அதிரடி நடவடிக்கை குறித்து கூறியுள்ள மேட்ரிமோனி.காம் சிஇஓ முருகவேல் ஜானகிராமன், “இந்திய இணையதளத்திற்கு இன்று கருப்பு நாள். எங்களது ஆப்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீக்கப்படுகின்றன” என்றார். ஒன்றிய அமைச்சரின் இந்த தலையீட்டைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் நீக்கப்பட்ட 10 இந்திய செயலிகளையும் மீண்டும் பிளே ஸ்டோரில் சேர்ப்பதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறது.