22 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்குத் தடை!!

 

இந்தியாவில், 22 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடனடி மெசேஜ் வசதி கொண்ட செயலிகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக உலக அளவில் 2 பில்லியன் யூசர் பயன்படுத்த கூடிய வாட்ஸ்அப் செயலியின் தேவை பல்வேறு வகையில் பெருகி உள்ளது. வாட்ஸ்அப் செயலி பல தரப்பு மக்களுக்கு எளிதாக பயன்படுத்த கூடிய வகையில் உள்ளதால் அனைவருக்கும் பிடித்தமான செயலியாக விளங்குகிறது.

இதில் தரப்பட்டுள்ள ஸ்டேட்டஸ் வசதி, ஸ்டிக்கர்ஸ், தரமான வீடியோ - ஆடியோ காலிங் வசதி, வாட்ஸ்அப் வெப், எமோஜிகள் போன்ற முக்கிய அம்சங்கள் தான் இந்த அளவிற்கு வாட்ஸ்அப் பிரபலமாவதற்கு காரணம். இந்த சூழலில், விதிகளை மீறியதாக 22 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை நிறுவனம் தடை செய்துள்ளது. புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 க்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதத்தில், மட்டும் வாட்ஸ்அப் நாட்டில் சுமார் 19 லட்சம் மோசமான கணக்குகளை தடை செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ஜூன் மாதத்தில் 632 புகார் அறிக்கைகளைப் பெற்றதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி 64 கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், +91 எனத் தொடங்கும் எண்களைக் கொண்டு இந்திய வாட்ஸ்அப் கணக்கு என அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் தனது தளத்தில் உள்ள குறைதீர்க்கும் வழிமுறைகள் மூலம் இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து பெற்ற புகார்களின் அடிப்படையில் இந்தக் கணக்குகளைத் தடை செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் சட்டங்கள் அல்லது வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறியதற்காகக் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பின் சேவை விதிமுறைகளை மீறுவதாக நினைக்கும் கணக்குகள் அல்லது நாட்டின் சட்டத்திற்கு எதிரான உள்ளடக்கத்தைக் கொண்டிருப்பதாகப் பயனர்கள் நினைத்தால் grievance_officer_wa@support.whatsapp.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு செய்தியை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் பயனர்கள் கணக்கைப் பற்றிப் புகாரளிக்க/புகார் செய்யத் தேர்வு செய்யலாம் எனவும், செய்தியை நீண்ட நேரம் அழுத்தினால், ‘அறிக்கை’ உள்ளிட்ட பல விருப்பங்கள் தோன்றும். ‘அறிக்கை’ என்பதைக் கிளிக் செய்வதன் மூலம், பயனர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படும். அதில், ‘அறிக்கை’ அல்லது ‘அறிக்கை மற்றும் தடை செய்’ என இருக்கும் அதன் வழியாக அந்த கணக்கைத் தடை செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.