உலகக்கோப்பை 2023: இந்தியா - பாகிஸ்தான் மோதல் தேதி அறிவிப்பு

 

ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை 2023 தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கு முன் கடந்த 1987-ம் ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தானுடன் இணைந்து நடத்திய இந்தியா மீண்டும் 1996-ல் இலங்கையுடன் சேர்ந்து நடத்தியது. அதே போல் 2011-ல் வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்திய இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையை முற்றிலும் தங்களது நாட்டில் இம்முறை தான் நடத்துகிறது.

இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி 1.10 லட்சம் ரசிகர்கள் அமரும் வகையில் குஜராத்தில் இருக்கும் அகமதாபாத் நகரில் கட்டமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் 2023 உலகக்கோப்பை துவங்க உள்ளதாக பிரபல கிரிக்பஸ் இணையத்தில் செய்திகள் வெளியாகி உள்ளது.

அந்த துவக்க போட்டியில் கடந்த ஃபைனலில் மோதிய நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட உள்ளன. அதே போல் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றை கடந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மாபெரும் ஃபைனலும் அதே மைதானத்தில் வரும் நவம்பர் 19-ம் தேதி நடைபெற உள்ளது. 

அத்துடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா அணி தங்களுடைய முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ள உள்ளது தமிழ்நாடு ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைக்கும் செய்தியாக அமைகிறது. அனைத்தையும் விட கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டி வரும் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் என்று தெரிய வருகிறது. 

மொத்தத்தில் கொல்கத்தா, டெல்லி, இந்தூர், தரம்சாலா, கௌஹாத்தி, ராஜ்கோட், ராய்ப்பூர், மும்பை, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், ஐதராபாத் ஆகிய நகரங்களில் இந்த உலகக் கோப்பையின் 48 போட்டிகள் நடைபெறுகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் முழு அட்டவணை ஐபிஎல் முடிந்ததும் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.