இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்.. தனி நபர் மூலம் தாக்குதல் நடத்தப்படலாம்!

 

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியில் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் என்று அச்சுறுத்தல் வெளியாகி உள்ளது.

2024-ம் ஆண்டின் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்க உள்ளது. 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 20 அணிகள் போட்டியிடுகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளிட்ட தரவரிசையில் உள்ள 8 அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன. முதல் முறையாக கனடா, உகாண்டா, அமெரிக்கா ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன.

20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், கடந்த 2012-13க்கு பிறகு இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.

இந்தச் சூழலில் அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டியின் போது ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு அமைப்பான கொராசான் என்ற தீவிரவாத குழு ‘Lone Wolf’ தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் நசாவ் கவுண்டி காவல் ஆணையர் பேட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க் ஆளுநரும் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அதீத கவனம் செலுத்துமாறு நியூயார்க் காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளார். இது போன்ற தீவிரவாத அமைப்புகளின் மிரட்டலை அவ்வப்போது அமெரிக்கா சந்திப்பது வழக்கம் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் மக்களின் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் தங்களது கவனம் கூடுதலாகவே இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதை சர்வதேச செய்தி நிறுவனங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.