பாரிஸ் ஒலிம்பிக்கில் 7 மாத கர்ப்பிணி.. வயிற்றில் குழந்தையுடன் நாட்டுக்காக வாள்வீச்சு!

 

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் வாள்வீச்சு பிரிவில் எகிப்து நாட்டைச் சேர்ந்த நடா ஹபிஸ் என்ற வீராங்கனை 7 மாத கர்ப்பிணியாக பங்கேற்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது.

2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் எகிப்து நாட்டை சேர்ந்த 26 வயதான நடா ஹபீஸ் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக பங்கேற்று இருக்கிறார். வாள்வீச்சு போட்டி என்பது மிகவும் அபாயகரமான விளையாட்டாக கருதப்படுகிறது. இதற்காக பிரத்தியேக உடைகளை அணிந்துதான் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இப்படி கடினமான போட்டியில் ஒரு பெண் கர்ப்பிணியாக பங்கேற்கிறார் என்றவுடன் உலகமே இந்த செய்தியை கண்டு ஆச்சரியப்பட்டு இருக்கிறது.

நடா ஹபீஸ் தன்னுடைய முதல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை எலிசபத்தை 15 க்கு 13 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். அப்போது தென்கொரியா வீராங்கனை ஜியோனை எதிர்கொண்ட அவர் தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடா ஹபீஸ், களத்தில் நீங்கள் பார்க்கும் போது இரண்டு பேர் சண்டை போடுவது மட்டும்தான் உங்களுக்கு தெரியும். ஆனால் உண்மையில் மூன்று பேர் இருக்கின்றோம். ஒன்று நான், இன்னொன்று என்னுடைய எதிர் போட்டியாளர், மூன்றாவது இந்த பூமிக்கு இன்னும் காலடி எடுத்து வைக்காத என்னுடைய குட்டி குழந்தை.

நானும் என் குழந்தையும் பல சவால்களை சந்தித்து இந்த போட்டியில் பங்கேற்று இருக்கின்றோம். உணர்வுபூர்வமாகவும் உடல் ரீதியாகவும் பல சவால்களை இந்த தொடரில் நான் சந்தித்தேன் என்று நடா ஹபீஸ் கூறியுள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் போது பல விஷயங்களைக் கடந்து வர வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையையும் என்னுடைய விளையாட்டிலும் நான் சரியாக கவனித்து விளையாடுகின்றேன். இது மிகவும் கடினமான விளையாட்டு தான். இருந்தாலும் இது மதிப்பு மிக்கது. கர்ப்பிணி பெண்ணாக கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வரை தகுதி பெற்றிருப்பதை நினைத்து நான் மகிழ்ச்சி கொள்கின்றேன் என்று நடா கூறியுள்ளார்.

ஏற்கனவே 2016 ரியோ ஒலிம்பிக் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்று இருக்கிறார். தாம் கர்ப்பிணியாக விளையாட தமது கணவர் முழு ஆதரவை வழங்கியதாகவும் அவர் வைத்த நம்பிக்கையால் தான் இந்த அளவிற்கு என்னால் வர முடிந்தது என்றும் நடா ஹபீஸ் கூறியுள்ளார்.