2025ல் RCB கேப்டன் கே.எல்.ராகுல்.. புதிய லெவல் ஸ்கெட்ச்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியப் பிறகு, தரமான கேப்டன் கிடைக்காத நிலையில், தென்னாப்பிரிக்கா வீரர் டூ பிளஸியை கேப்டனாக நியமித்தனர். இதனால், ஐபிஎல் 18-வது சீசனின் மெகா ஏலத்திற்கு முன், டூபிளஸியை அணியைவிட்டே தூக்க அதிக வாய்ப்புள்ளது.
இதனால், டூ பிளஸிக்கு மாற்றாக தரமான கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் பெங்களூரு அணி இருக்கிறது. கிளென் மேக்ஸ்வெல் அணியில் இருந்தாலும், அவர் ஐபிஎல் என வந்துவிட்டால் சொதப்ப ஆரம்பித்துவிடுகிறார். இதனால், அவரை கேப்டனாக நியமிக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், ஐபிஎல் 18-வது சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், ட்ரேடிங் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரரை வாங்கி, டூ பிளஸிக்கு மாற்று கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் யார் என்றால் கே.எல்.ராகுல் தான். லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி, கே.எல்.ராகுலின் கேப்டன்ஸி குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிக்கு நிகோலஸ் பூரனை கேப்டனாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால்தான், ராகுல் அதிருப்தியில் இருப்பதாகவும், ட்ரேடிங் மூலம் வெளியேற முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
32 வயதாகும் கே.எல்.ராகுல் இதுவரை மொத்தம் 132 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4,683 ரன்களை அடித்துள்ளார். 134.61 ஸ்ட்ரைக் ரேட், 45.47 சராசரியுடன் இந்த ரன்களை அடித்துள்ளார். ஒரு இன்னிங்ஸில் 132 ரன்களை அடித்திருக்கும் அவர், 4 சதம், 37 அரை சதங்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.