ஹர்ஷல் படேலுக்கு பர்ப்பிள் கேப்.. 2வது முறையாக கைப்பற்றி பிரம்மாண்ட சாதனை!

 

2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிய ஹர்ஷல் பட்டேல் ஊதா நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய 17-வது ஐபிஎல் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத், கொல்கத்தா அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 18.3 ஓவர்களில் 113 ரன்களில் சுருண்டது. 

இதையடுத்து 114 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில்  2 விக்கெட்டை மட்டும் இழந்து 114 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடைசியாக 2014-ம் ஆண்டு கோப்பையை வென்றிருந்த கொல்கத்தா 10 ஆண்டுக்கு பிறகு கோப்பையை கைப்பற்றியது.

இந்த தொடரில் அதிக ரன் அடித்தவருக்கான ஆரஞ்சு நிற தொப்பி விராட் கோலிக்கும் (741 ரன்), அதிக விக்கெட் எடுத்தவருக்கான ஊதா நிற தொப்பி ஹர்ஷல் படேலுக்கும் (24 விக்கெட்) வழங்கப்பட்டது. ஹர்ஷல் படேல் ஊதா நிற தொப்பியை தற்போது 2வது முறையாக வென்றுள்ளார். ஏற்கனவே கடந்த 2021-ம் ஆண்டில் பெங்களூரு அணிக்காக ஆடிய ஹர்ஷல் படேல் அப்போதும்  ஊதா நிற தொப்பியை வென்றிருந்தார்.

தற்போது 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடிய ஹர்ஷல் பட்டேல் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் ஊதா நிற தொப்பியை அதிக முறை கைப்பற்றியவர்கள் பட்டியலில் டுவைன் பிராவோ, புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

டுவைன் பிராவோ (சென்னை அணிக்காக) - 2013, 2015

புவனேஷ்வர் குமார் (ஐதராபாத் அணிக்காக) - 2016, 2017

ஹர்ஷல் படேல் (பெங்களூரு, பஞ்சாப் அணிகளுக்காக) - 2021, 2024