பிரேரக் மன்கட் அரைசதம்... ஐதராபாத் அணியை வீழ்த்தி லக்டனோ அணி அபார வெற்றி!!

 

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடரின் 587வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அல்மோன்பிரீத் சிங், அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். தொடக்கத்தில் அபிஷேக் ஷர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 20 ரன்களுக்கும் , சிறப்பாக விளையாடிய அல்மோன்பிரீத் சிங் 36 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த மார்க்ரம் 28 ரன்கள், கிளென் பிலிப்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஹென்ரிச் கிளாசன், அப்துல் சமத் இணைந்து அதிரடி காட்டினர். இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர். சிறப்பாக விளையாடிய கிளாஸன் 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து வெளியேறினார். மறுமுனையில் சமத் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 183 ரன்கள் இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மேயர்ஸ், டி காக் களமிறங்கினர். மேயர்ஸ் 2 ரன்களிலும், சிறப்பாக ஆடிய டி காக் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய பிரேரக் மன்கட், ஸ்டாய்னிஸ் இருவரும் இணைந்து சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடி காட்டிய ஸ்டாய்னிஸ் 40 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த பூரன் பந்துகளை சிக்சருக்கு பறக்க விட்டார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய மன்கட் அரைசதம் அடித்தார். இறுதியில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 19.2 ஓவர்களில் 185 ரன்கள் எடுத்து அசத்தல் வெற்றி பெற்றது.