உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: வங்கதேச அணியை வீழ்த்தி நெதர்லாந்து அபார வெற்றி

 

வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 27-வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 3 ரன்னிலும், ஓ டவுட் ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்துவந்த பாரேசி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒருபுறம் கேப்டன் எட்வர்ட்ஸ் நிலைத்து நின்று விளையாடினாலும், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தது. அக்கர்மேன் 15 ரன்னிலும், டி லீட் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்த நிலையில் 68 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இறுதியில் நெதர்லாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் அணைத்து விக்கெட்களையும் இழந்து 229 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் சொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரகுமான், மெஹதி ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து, 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. நெதர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதில், அதிகபட்சமாக வங்கதேச அணியின் ஹசான் மிராஸ் 35 ரன்களும், மஹ்முதுள்ளா 20 ரன்களும், மஹெடி ஹாசன் 17 ரன்களும், தன்சித் ஹாசன் 15 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தனர். 

நஜ்முல், ஷாகிப் அல் ஹாசன், முஷ்பிகர் ரஹிம், லிட்டன் தாஸ் ஆகியோர் ஒற்றை இலக்கில் ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி 42.2 ஓவரில் அணைத்து விக்கெட்களையும் 142 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் நெதர்லாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.