ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்... 3 ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்த விராட் கோலி!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 3 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி அபாரமாக சதம் அடித்துள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இந்தியாவும், மூன்றாவது போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வென்றது. இந்த நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. உஸ்மான் கவாஜா (180 ரன்கள்), கேமரூன் கிரீன் (114 ரன்கள்) சதம் அடித்தனர். இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்து இருந்தது. கேப்டன் ரோகித் சர்மா 17 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3-வது நாள் முடிவில், இந்திய அணி 99 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. விராட்கோலி 59 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. நிதானமாக விளையாடிய கோலி 241 பந்தில் தன் 28வது சதத்தை எடுத்தார். இந்த சதம் மூலம் விராட் கோலி தனது 75வது சதத்தை பூர்த்தி செய்தார்.

இதற்கு முன்னர் விராட் கோலி கடந்த நவம்பர் 2019-ம் ஆண்டில் தனது கடைசி டெஸ்ட் சதத்தை எடுத்தார். விராட் கோலி சில நாட்களாக சரியான ஃபார்மில் இல்லை என கூறப்பட்ட போது, டி20 போட்டியில் சதமடித்து மீண்டும் ஃபார்முக்கு வந்தார். மேலும் ஒருநாள் போட்டியிலும் தனது சதத்தை பதிவு செய்தார். அதற்கு பின்னர் வரிசையாக சதமடித்தாலும், டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை என்றும், விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.


இந்த நிலையிலிருந்து தான் விராட் கோலி பேட்டில் இருந்து வந்துள்ளது அந்த சதம். தனக்கு மிகவும் பிடித்த, போட்டியாக கருதக்கூடிய ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார் விராட் கோலி. சதமடித்த உடன் தனது வழக்கமான செலிபிரேஷனை வெளிபடுத்தி, தனது செயினை முத்தமிட்டு சதத்தை வரவேற்றார்.

தற்போதுள்ள ஃபேப்-4யில், டெஸ்ட் போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் 30 சதத்துடனும், ஜோ ரூட் 29 சதத்துடனும், விராட் கோலி 28 சதத்துடனும் கேன் வில்லியம்சன் 26 சதத்துடனும் முன் வரிசையில் உள்ளனர். உலக கோப்பை இறுதி போட்டி நடைபெறவுள்ள  நிலையில், விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.