பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி!

 

பெங்களூரு அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது.

17-வது ஐபிஎல் சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக விராட் கோலி , டு பிளசிஸ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் 8 ரன்களுக்கு டு பிளசிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் கேமரூன் கிரீன் , விராட் கோலி இணைந்து சிறப்பாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 82 ரன்னாக இருந்த போது கிரீன் 33 ரன்களுக்கு வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடியாக ஆடிய விராட் கோலி அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி  182 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 59 பந்துகளில் 83 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் இலக்கை நோக்கி வேகமாக முன்னேறிய கொல்கத்தா வெறும் 16.5 ஓவர்களிலேயே இலக்கை கடந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பெங்களூருவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய கொல்கத்தா தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.  கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்தார்.