மரண பயம் காட்டிய கிளாசன்.. ஐதராபாத் அணி போராடி தோல்வி

 

ஐபிஎல் தொடரின் 3வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.

17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று சென்னையில் தொடங்கியது. இந்நிலையில், இன்று நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் நரைன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களம் இறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன், ஸ்ரேயஸ் ஐயர் 0 ரன், நிதிஷ் ராணா 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் கொல்கத்தா அணி 51 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து பில் சால்ட்டுடன் ரமன்தீப் சிங் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் ரமன்தீப் சிங் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிங்கு சிங் களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சால்ட் அரைசதம் அடித்த நிலையில் 54 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரசல் 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கொல்கத்தா தரப்பில் அதிரடியாக ஆடிய ரசல் 64 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 209 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஐதரபாத் அணியின் தொடக்க வீரர்களாக மயங் அகர்வால், அபிஷேக் சர்மா சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அகர்வால் 32 ரன்களிலும், அபிஷேக் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.  

அடுத்து வந்த திரிபாதி 20 ரன்களிலும், மார்க்ரம் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தார். ஆனால், அதிரடியாக ஆடிய கிளாசன் அரைசதம் விளாசினார். அப்துல் சமத் 15 ரன்கள் எடுத்தார். 63 ரன்கள் குவித்த கிளாசன் கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். வெற்றிபெற கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஐதராபாத் ரன் எதுவும் எடுக்கவில்லை.

இறுதியில் ஐதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் மட்டுமே எடுத்தது போராடி தோல்வியடைந்தது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றிபெற்றது.