கிங் கோலி அதிரடி ஆட்டம்... ஐபிஎல் வரலாற்றில் 7 ஆயிரம் ரன்கள் கடந்து புதிய சாதனை!!

 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்துள்ளார்.

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் கடந்த மார்ச் 31-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஐபிஎல் தொடரின் 50வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி, டு பிளிஸ்சிஸ் களம் இறங்கினர். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 55 ரன்கள் எடுத்தார். 

அத்துடன் ஐபில் வரலாற்றில் அதிக 7 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். 233 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 அரைசதங்களுடன் மொத்தம் 7,036 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த வரிசையில் 6,536 ரன்களுடன் ஷிகர் தவன் 2ம் இடத்திலும், 6,189 ரன்களுடன் டேவிட் வார்னர் 3வது இடத்திலும், 6,063 ரன்களுடன் ரோகித் சர்மா 4வது இடத்திலும், 5,528 ரன்களுடன் சுரேஷ் ரெய்னா 5வது இடத்திலும் உள்ளனர்.

மற்றொரு தொடக்க வீரரான பாப் டு பிளிஸ்சிஸ் சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கிளென் மேக்ஸ்வெல் ரன் எடுக்காமல் வெளியைற, மஹிபால் லோம்ரோர் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 54 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்து வருகிறது.