டி20 உலக கோப்பையில் விராட் கோலி இடம்பெறுவது சந்தேகம்? காரணம் என்ன?

 

 டி20 உலகக் கோப்பைத் தொடரில், இந்திய அணியில் விராட் கோலி தேர்வு செய்யப்படமாட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

2024-ம் ஆண்டின் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1ம் தேதி முதல் 29ம் தேதிவரை நடக்க உள்ளது. 2022ம் ஆண்டுடி20 உலகக் கோப்பையில் 16அணிகள் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 20 அணிகள் போட்டியிடுகின்றன. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி உள்ளிட்ட தரவரிசையில் உள்ள 8 அணிகள் தானாகவே தகுதி பெற்றுவிட்டன. முதல் முறையாக கனடா, உகாண்டா, அமெரிக்கா ஆகிய அணிகள் உலகக் கோப்பையில் பங்கேற்கின்றன.

20 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். ஒவ்வொரு அணியும் டி20 உலகக் கோப்பைக்காக தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய அணியும் உலகக் கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் டி20 தொடரில் விளையாடி அதிலிருந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பெறமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகையில், “வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் ஸ்லோ பிட்ச் கொண்டவை. இங்கு பந்து மெதுவாகவே பேட்ஸ்மேனை நோக்கி வரும், பொறுமையாக பேட் செய்ய வேண்டும். இதுபோன்ற ஆடுகளங்கள் விராட் கோலி பேட்டிங் ஸ்டைலுக்கு உகந்ததாக இருக்காது.

ஆதலால், இந்திய அணியிலிருந்து கோலி நீக்கப்பட வாய்ப்புள்ளது. விராட் கோலியை உலகக் கோப்பைக்குத் தேர்ந்தெடுக்காமல் அவரை நீக்குவது தேர்வாளர்களுக்கு கடினமான முடிவாகத்தான் இருக்கும். ஆனால், வேறு வழியில்லை எதிர்காலத்தில் அணியை வழிநடத்திச் செல்லவும், இளம் வீரர்களை உருவாக்கவும், வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு அதிக வாய்ப்புகளைத் தர வேண்டும், சர்வதேச அரங்கில் அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினால்தான் ஊக்கமாக அமையும். ஆதலால் விராட் கோலி அணியிலிருந்து நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது ” எனத் தெரிவித்தன.

விராட் கோலி கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இந்திய அணியில் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கோலி விளையாடவில்லை. விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு 2வது குழந்தை பிறந்ததையடுத்து கோலி போட்டிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தார். இதற்கிடையே வரும் 22-ம் தேதி சென்னையில் தொடங்கும் ஐபிஎல் டி20 தொடரில் 3 மாதங்களுக்குப்பின் கோலி கிரிக்கெட் விளையாட உள்ளார்.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை அணியை எதிர்த்து விராட் கோலி இருக்கும் பெங்களூரு அணி மோதுகிறது. இந்தத் தொடரில் விராட் கோலியின் பேட்டிங் திறமை சிறப்பாக இருந்தால், கடைசி நேரத்தில்கூட இந்திய அணிக்குள் கோலி வரலாம்.