உலகக் கோப்பைக்கு இதுதான் மரியாதையா? மிட்செல் மார்ஷின் சர்ச்சையான புகைப்படம்!

 

உலகக் கோப்பையை காலுக்கு ஸ்டாண்ட் போல் வைத்து, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ‘போஸ்’ கொடுத்த புகைப்படம் சர்ச்சையாகி உள்ளது.

13வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில், தொடரின் இறுதிப்போட்டி நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணிக்கு இந்தியா வெறும் 240 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. 241 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 வது ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கு எட்டியது. இதன்பின் 6-ம் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய வீரர்கள் மகிழ்ச்சி பொங்க உற்சாகமாக ‘போஸ்’ கொடுத்தனர்.

அதன் பின்னர் உலகக் கோப்பையை காலுக்கு ஸ்டாண்ட் போல் வைத்து, ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் கொடுத்த ‘போஸ்’ சர்ச்சையாகி உள்ளது. ஆனால் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்து உண்மை தன்மை உறுதி செய்யப்படவில்லை. கிரிக்கெட்டை தேசிய விளையாட்டாக கொண்ட ஆஸ்திரேலியா, உலகக் கோப்பைக்கு தரும் மரியாதை இதுதானா என மிட்செல் மார்ஷை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஃபிஃபா உலகக் கோப்பை 2022-ஐ வென்ற மெஸ்ஸி அதனை கட்டிப்பிடித்தவாறு உறங்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மிட்செல் மார்ஷ் பகிர்ந்த படம் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.