உலகக்கோப்பை கிரிக்கெட் 2023: இலங்கையை வீழ்த்தி வங்கதேசம் அபார வெற்றி!

 

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். 

இந்த தொடரில் இன்று நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக நிசாங்கா, குசல் பெரேரா ஆகியோர் களமிறங்கினர். இதில் பெரேரா 4 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த மெண்டிஸ் 19 ரன்னில் வெளியேற, நிதானமாக ஆடிய நிசங்கா 41 ரன்னில் ஆட்டமிழந்தார். 

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவிக்ரமா 42 பந்துகளில் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வீரராக மேத்யூஸ் களமிறங்கினார். மேத்யூஸ் களத்திற்குள் நுழைந்தபோது அவரது ஹெல்மெட்டில் ஏதோ பிரச்சினை இருந்துள்ளது. இதனால், அவர் 2 நிமிடங்களுக்கு மேல் பேட்டிங் செய்யாமல் களத்திலேயே நின்றுள்ளார். எனவே அவர் டைம் அவுட் முறையில் அவுட் ஆனார். இதன்மூலம் கிரிக்கெட் வரலாற்றில் டைம் அவுட் முறையில் அவுட் ஆன முதல் வீரரானார் மேத்யூஸ். 

அதன் பிறகு களமிறங்கிய அசலாங்கா தனது பொறுப்பான ஆட்டத்தால் சதம் விளாசினார். அவர் 105 பந்துகளில் 108 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய தனன்ஜெயா 34 ரன்களிலும், தீக்ஷனா 22 ரன்களிலும், துஷ்மந்தா 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பிறகு களமிறங்கிய ரஜிதா, மதுஷங்கா ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 279 ரன்கள் குவித்தது. வங்கதேச அணி தரப்பில் தான்சிம் 3 விக்கெட்டுகளையும் ஷரிப் இஸ்லாம், சகீப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான தன்சித் ஹசன் 9 ரன்களிலும், லிட்டன் தாஸ் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த சகீப் அல் ஹசன், ஹூசைன் ஷாண்டோ ஜோடி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன்ரேட்டை உயர்த்தியது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதத்தை பதிவு செய்து அசத்தினர். 

பின்னர் சதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சகீப் அல் ஹசன் 82 ரன்களும், ஹூசைன் ஷாண்டோ 90 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய முஷிபூர் ரஹிம் 10 ரன்களும், மஹமதுல்லா 22 ரன்களும், மெஹதி ஹசன் மிர்சா 3 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ஷிருதய் 15 ரன்களும், ஹசன் ஷாகிப் 5 ரன்னும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் வங்கதேச அணி 41.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் சார்பில் அதிகபட்சமாக மதுஷங்கா 3 விக்கெட்டுகளும், தீக்ஷனா மற்றும் மேத்யூஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தி வெற்றி பெற்று.