கடைசி பந்து வரை போராடிய குஜராத்.. டெல்லி அணி த்ரில் வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
17-வது ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 40-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி , டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜேக் மெக்கர்க், பிரித்வி ஷா ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் அதிரடி காட்டினர். தொடக்க விக்கெட்டுக்கு 36 ரன்கள் சேர்த்த நிலையில் மெக்கர்க் 14 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் பிரித்வி ஷா 11 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஷாய் ஹோப் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய அக்சர் படேல், ரிஷப் பண்ட் ஆகியோர் இருவரும் இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்ட அக்சர் படேல், ரிஷப் பண்ட் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் அக்சர் படேல் 43 பந்துகளில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசியில் ரிஷப் பண்ட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி காட்டினர்.
பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 88 ரன்கள் எடுத்தார்.
இதனைத்தொடர்ந்து 225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் சுப்மன் கில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தாக சகாவுடன், சாய் சுதர்ஷன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன்கள் குவித்த இந்த ஜோடியில் விருதிமான் சகா 39 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஓமர்சாய் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய சாய் சுதர்ஷன், தனது அரை சதத்தை பதிவு செய்திருந்த நிலையில் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஷாரூக்கான் 8 ரன்னும், ராகுல் தேவாட்டியா 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இதனிடையே மறுமுனையில் அதிரடியாக ரன்கள் குவித்து அரைசதத்தை பதிவு செய்திருந்த டேவிட் மில்லர் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்தாக ரஷித் கானுடன், சாய் கிஷோர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் அதிரடி காட்டிய சாய் கிஷோர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
முடிவில் அதிரடி காட்டிய ரஷித் கான் 21 ரன்களும், மோகித் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் குஜராத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக டார் சலாம் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதன்மூலம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது.