மைதானத்தில் மயங்கி விழுந்து கால்பந்து வீரர் பலி.. போட்டியின் போது நிகழ்ந்த சோகம்!
உருகுவே நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடரில் கடந்த 22-ம் தேதி நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் சாவ் பாலோ - உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சாவ் பாலோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக இந்த ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் கிளப் நேஷனல் டி கால்பந்து அணியின் டிபெண்டர் ஜுவான் ஸ்கியர்டோ (27) மைதானத்தில் சுருண்டு விழுந்து மயக்கம் அடைந்தார்.இதையடுத்து உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஜுவான் இஸ்கியர்டோவுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி விழுந்ததாகவும், அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜுவான் ஸ்கியர்டோ உயிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிளப் நேஷனல் டி கால்பந்து தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில், எங்கள் இதயங்களில் ஆழ்ந்த வலி மற்றும் தாக்கத்துடன், தேசிய கால்பந்து கிளப், எங்கள் அன்பான வீரர் ஜுவான் ஸ்கியர்டோவின் மரணத்தை அறிவிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.