CSK அணியிலிருந்து விடுவிக்கப்படும் நட்சத்திர வீரர்.. வெளியான தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி!

 

ஜபிஎல் சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடக்க உள்ள நிலையில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு துவங்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் 17-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த டி20 தொடரான ஐபிஎல்-ன்  17-வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அந்த சீசனுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் 19-ம் தேதி துபாயில் நடக்க உள்ளது. இதையொட்டி விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வருகிற 26-ம் தேதிக்குள் அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் 16-வது சீசனில் குஜராத்தை தோற்கடித்த தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக கோப்பையை வென்று அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பையின் சாதனையை சமன் செய்தது.

இந்நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி ஏலத்திற்கு முன்பாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்- ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் சென்னை நிர்வாகம் ரூ. 16.25 கோடி என்ற பிரம்மாண்ட தொகையில் ஸ்டோக்ஸை வாங்கியது. இருப்பினும் அந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஆஷஸ் தொடருக்காக ஐபிஎல் முழுவதுமாக விளையாட மாட்டேன் என்று அறிவித்த அவர் முழங்கால் காயத்தால் ஓரிரு போட்டிகளில் மட்டுமே  விளையாடி ஏமாற்றத்தை கொடுத்தார்.

கால்முட்டி பிரச்சினையால் அவதிப்படும் 32 வயதான பென் ஸ்டோக்ஸ் உலகக்கோப்பை போட்டியில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடினார். ஆல் ரவுண்டரான அவர் பந்துவீசவில்லை. கால்முட்டி காயத்துக்கு விரைவில்  அறுவை சிகிச்சை செய்ய உள்ள அவர் அடுத்த 2 - 3 மாதங்களுக்கு விளையாட மாட்டார் என்பதால் 2024 சீசனிலும் விளையாடுவது சந்தேகம். அதனால் அவரை விடுவிக்க சென்னை அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டால்  ரூ.16.25 கோடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையிருப்பில் சேர்ந்து விடும். அதனை ஏலத்தில் பயன்படுத்தி வேறு சில வீரர்களை வாங்கிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.