கார் விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் லஹிரு திரிமான்னே கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் லஹிரு திரிமான்னே. இலங்கை அணிக்காக கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகமான திரிமான்னே, 44 டெஸ்ட், 127 ஒருநாள் மற்றும் 82 டி20 போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் உள்பட 6,500-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். மேலும் இவர் இலங்கை அணிக்காக மூன்று டி20 உலகக்கோப்பை விளையாடியுள்ளார்.

அதில் 2014-ம் ஆண்டு இலங்கை அணி டி20 உலகக்கோப்பையை வென்றதற்கு திரிமான்னேவின் பங்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அவர் கடைசியாக 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அனுராதபுரம் பகுதியில் லஹிரு திரிமான்னே சாலை விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி லஹிரு திரிமான்னே குடும்பத்துடன் கோவிலுக்கு தனது காரில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விபத்தில் சிக்கியவர்களை அருகிலுள்ள அனுராதபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வெளியான செய்திகளில், “திரிமான்னே இருந்த காரில் இருந்து குறைந்தது ஒரு பயணி அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், விபத்து ஏற்பட்ட போது திரிமான்னே புனித யாத்திரையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. முக்கியமாக கார் எதிர்திசையில் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.