இந்தியாவில் 2025-ல் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி!!

 

2025-ம் ஆண்டு நடைபெற இருக்கும் மகளிர் உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

பர்மிங்காமில் நடந்து வரும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) பொதுக்குழு கூட்டத்தில் எதிர்வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் குறித்து விவாதித்து முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2024-ம் ஆண்டில் நடைபெற இருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் வங்கதேசத்திலும், 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் உலகக் கோப்பை டி20 தொடர் இங்கிலாந்திலும் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

2025-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இந்தியாவும், 2027-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கையில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த தொடரை நடத்துவதற்கான ஏல முறை, பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி இடம்பிடித்த ஐசிசி வாரிய துணை குழு முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை இந்தியா பெற்றுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி வெளியிட்டுள்ள செய்தியில், 2025 ஆம் மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை நடத்துவதற்கு இந்தியா ஆர்வமாக இருந்தது. தற்போது அதற்கான வாய்ப்பை பெற்றிருப்பதில் மகிழ்ச்சி. கடந்த 2013-ம் ஆண்டில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியா நடத்தியது. அதன் பிறகு மகளிர் கிரிக்கெட் அபாரமாக வளர்ச்சியடைந்தது. தற்போது மகளிர் கிரிக்கெட்டின் புகழ் முன்னேற்றம் அடைந்திருப்பதோடு, சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறது. ஐசிசியுடன் நெருக்கமாக பணியாற்றி அனைத்து தேவைகளையும் பிசிசிஐ பூர்த்தி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.