மலேசிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி..!

 

மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்திய பேட்மிண்டனின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து உலகளவில்  பேட்மிண்டன் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளார். மேலும்  பல சாதனைகளை படைத்த இந்தியாவிற்காக ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கங்கள் பெற்று தந்துள்ளார். சிந்து  காயம் காரணமாக 5 மாதங்களாக ஓய்வில் இருந்தார், பிறகு காயத்திலிருந்து மீண்டு மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றார்.

இந்த தொடரில் நாக் அவுட் சுற்றில் உலகின் பேட்மிண்டன் வீராங்கனைகள் தரவரிசையில் 9வது இடத்தில் இருக்கும் 3 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயினை சேர்ந்த கரோலினா மரின் மற்றும்  பி.வி சிந்து மோதினார்கள். இந்த போட்டியில் முதல் செட்டில் 21-12 என்ற நிலையில் கரோலினா மரின் முன்னிலை பெற்று சிந்துவிற்கு அழுத்தத்தை கொடுத்தார்.

அதன்பின் இரண்டாவது செட்டில்  மீண்டு வந்த சிந்து 10-21 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்றார். இறுதியாக மூன்றாவது சுற்றில் இருவருக்கும் இடையில் நடந்த பலப்பரீட்சையில் 21-15 என்ற புள்ளிகள் அடிப்படையில் 2 செட்களை கைப்பற்றி கரோலினா மரின் போட்டியில் வெற்றி பெற்றார்.

இந்த தோல்வியின் மூலம் பி.வி.சிந்து மலேசிய ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் தொடரில் சிறப்பாக விளையாடிய சிந்து தங்க பதக்கத்தை வென்று அசத்தினார். அதன்பின் காயம் ஏற்பட்டு மொத்தமாக 2022 நடந்த அனைத்து தொடர்களில் இருந்து விலகினார்.