தங்கம் வெல்லும் முனைப்பில் செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்கும் நிறைமாத கர்ப்பிணி ஹரிகா!!

 

கிராண்ட் மாஸ்டர் ஹரிகா 8 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நாளை நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கிறார்.

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறுகின்றது. இந்த போட்டியில் சர்வதேச அளவில் 187 நாடுகள் பங்கேற்பதுடன் 2,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்த போட்டியில் இந்தியா சார்பில் மொத்தம் 6 அணிகள் களமிறக்கப்படுகின்றன. ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதில், பெண்கள் பிரிவில் இந்தியா 1 அணியில் கோனேரு ஹம்பி, ஹரிகா, வைஷாலி, தானியா சச்தேவ், பாக்தி குல்கர்னி ஆகிய வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர். அதில், ஆந்திராவை சேர்ந்த ஹரிகா துரோனவள்ளி (31), 8 மாத கர்ப்பிணியாக செஸ் ஒலிம்பியாட்டில் களமிறங்குகிறார்.

உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள ஹரிகா, தனது 9 வயதில் தேசிய செஸ் சாம்பியன் பட்டம் வெற்றார். தனது 10-வது வயதிலும் ஹரிகா மீண்டும் தேசிய அளவிலான செஸ் போட்டியில் பதக்கத்தையும் வென்றார். செஸ் உலகின் வெற்றிநடைபோட்டு வரும் ஹரிகாவுக்கு 2008-ல் மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கௌரவித்தது.

அதனைத் தொடர்ந்து 2012, 2015, 2017 ஆகிய 3 ஆண்டுகள் பெண்கள் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்று ஹரிகா சாதனை படைத்தார். 2011- ல் நடந்த செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். இவரது சாதனைகளை மேலும் சிறப்பிக்கும் விதமாக 2019-ல் ஹரிகாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வெல்லும் முனைப்பில் ஹரிகா மனதளவிலும், உடலளவிலும் தயாராகி வருகிறார். ஹரிகாவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போட்டி அரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம், மருத்துவக்குழு என தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அவர், மனரீதியாக எந்தவித மாற்றமும் இன்றி சகஜமாக இருக்கிறேன். உடல் ரீதியாக சிக்கல்கள் வரலாம். எனினும் அதனை மீறி வெல்வேன் என நம்பிக்கையுள்ளதாக கூறியிருக்கிறார். செஸ் விளையாட்டை பொறுத்தவரை நீண்ட நேரம் அமர்ந்து விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால் நிறைமாத கர்ப்பிணியான ஹரிகா மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது.