விசாக்கள் ஏப்ரல் 15 -ந்தேதி வரை ரத்து!
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விசாக்கள் ஏப்ரல் 15 வரை மத்திய அரசால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் – 56, வெளிநாட்டினர் – 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், தூதரக ரீதியிலான விசா ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்பு அதிகாரிகளுக்கான விசா, வேலைவாய்ப்பு விசா தவிர்த்து அனைத்து விசாக்களும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விசா இல்லாமல் இந்தியாவில் பயணிக்க வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதியும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், இந்த முடிவு நாளை மாலை 5.30 மணி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய வேண்டிய கட்டாய நிலையில் இருக்கும் வெளிநாட்டினர் தத்தமது நாட்டிலுள்ள இந்திய தூதரகங்களை அணுகலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
சீனா, இத்தாலி, ஈரான், கொரிய குடியரசு, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் பிப்ரவரி 15 ஆம் தேதிக்கு பிறகு சுற்றுப்பயணம் செய்த நிலையில், இந்தியா வரும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் கட்டாயம் குறைந்தபட்சம் 14 நாள்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் இந்தியர்கள் அனைவரும் மிகவும் அத்தியாவசியமில்லாத வெளிநாட்டு பயணங்களை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுவதாகவும், அவ்வாறு வெளிநாடு சென்றுவிட்டு திரும்பும் இந்தியர்களும் கட்டாயம் 14 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இத்தாலியில் கல்வி காரணங்களுக்காக சென்றோர், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மூலம் கொரோனா உள்ளதா என பரிசோதனைக்கு உட்படுத்தலாம் என்றும், அதில் கொரோனா இல்லை என்பது உறுதியாகும்பட்சத்தில், விருப்பப்பட்டால் இந்தியா வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.