‘நான் கண்ட கலைஞர்’ – கார்த்திகேய சிவசேனாபதி : காட்சி 3 ‘கொங்கு வேளாளர்’

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொங்கு வேளாளர் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ள அரசியலமைப்பு, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு. அப்படிச் சிலருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. நாம் சட்டமன்றம், பாராளுமன்றம் என்று சொல்கிறோம். பொதுவாக பார்லிமெண்ட் அல்லது ஹவுஸ் என்று பல நாடுகளில் அரசியல் அமைப்பு இருக்கிறது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், உறுப்பினர்கள், செனட்டர்கள், எம்.பி.க்கள் என பலவாறு அழைக்கப்படுகிறார்கள். வெளிநாடுகளில் அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன். வாக்குகள் மூலம்
 

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொங்கு வேளாளர்

வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, அங்குள்ள அரசியலமைப்பு, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் உண்டு. அப்படிச் சிலருடன் பேசும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. நாம் சட்டமன்றம், பாராளுமன்றம் என்று சொல்கிறோம். பொதுவாக பார்லிமெண்ட் அல்லது ஹவுஸ் என்று பல நாடுகளில் அரசியல் அமைப்பு இருக்கிறது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், உறுப்பினர்கள், செனட்டர்கள், எம்.பி.க்கள் என பலவாறு அழைக்கப்படுகிறார்கள்.

வெளிநாடுகளில் அரசியல் செயல்பாடுகளிலிருந்து ஒரு விஷயத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன். வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு அரசியல்வாதியும் தங்கள் தொகுதியைப் பற்றியும், அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படைப் பொருளாதாரம், தேவைகள், பிரச்சனைகள் பற்றி ஒரளவுக்கேனும் புரிந்து வைத்துள்ளார்கள்.

தேர்தலில் போட்டியிடும் போதே, அந்தத் தொகுதிக்கான குறிப்பிட்ட பிரச்சனைகளை முன்வைத்தே பிரச்சாரம் செய்கிறார்கள். மத்திய அரசோ, மாநில அரசோ, தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவையில் தங்கள் தொகுதி மக்கள் பிரச்சனைகளுக்கான மசோதோ கொண்டு வர முயற்சி எடுக்கிறார்கள். ஒருவேளை அந்த மசோதா நிறைவேற்றப் படாவிட்டாலும், அவர்களின் முயற்சி தொகுதி மக்களால் பாராட்டப்படுகிறது. அடுத்த தேர்தலில் தைரியமாகச் சென்று வாக்கு கேட்க முடிகிறது.

எங்கள் அப்பாவிடம், அவர் காலத்தில் தேர்தல்கள் எப்படி இருந்தது. எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் செயல்பாடு எப்படி என்றெல்லாம் கேட்டிருக்கிறேன், விவாதித்துள்ளேன். காமராஜர், அண்ணா, கலைஞர் ஆட்சியிலும் அடுத்து வந்த எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் மக்கள் பிரச்சனைகள் பற்றி ஒரளவுக்கேனும் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் பேசியிருக்கிறார்கள். சம்மந்தப்பட்ட துறை மூலமாக தொகுதிக்குட்ப்பட்ட சில முக்கியமான கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளார்கள் எனவும் அறிந்தேன்.

அப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது, தாத்தா சாமிநாதன் தன் தொகுதி மக்களுக்காக என்ன செய்தார் என்றும் கேட்டேன். கொங்கு மண்டலத்தில் திமுக வளர்ச்சிக்காக தளபதி அர்ஜுனுடன் பாடுபட்ட முன்னோடிகள் என்பதால், தொகுதி சார்ந்து இல்லாமல், ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்திற்கான கோரிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

கொங்கு பகுதியில் வேளாண்மையை செழிக்கச் செய்ய பரம்பிக்குளம்-ஆழியாறு, வட்டமலைக் கரை, நல்லதங்காள் ஓடை திட்டங்களின் விரிவாக்கங்களை தாத்தா எடுத்துரைத்து, கலைஞர் நிறைவேற்றித் தந்ததை, கொங்கு மண்டல மக்கள் மறந்திருக்கக் கூடும். ஆனால் வரலாறு நிலைத்திருக்கிறதல்லவா! இன்னும் ஒரு மிக முக்கியமான ஒரு கோரிக்கையை கொங்கு மண்டல சமுதாயத்திற்காக தாத்தா முன்னெடுத்தார். அனைத்தையும் தீர விசாரித்து ஆலோசித்து நிறைவேற்றித் தந்துள்ளார் கலைஞர்.

67 – 76 ஆட்சியின் காலக்கட்டத்தில் கொங்கு மண்டலத்தில், கோவையில் ஒரு சில பெரிய தனியார் தொழில் நிறுவனங்கள் மட்டுமே உண்டு. பின்னலாடையினால் திருப்பூர் தொழில் நகரமானது பின்னாளில் தான். ஒட்டு மொத்த கொங்கு மண்டலமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தது. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை. சென்னைக்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்ல வேண்டிய நிலைதான். கொங்கு பகுதியில் அதிக மக்கள் தொகை கொண்ட கவுண்டர்கள் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர்.

1955 – ஆம் ஆண்டு திரு. காகா கலில்கார் தலைமையில் அமைக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு கமிசன் அறிக்கையில் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் வகுப்பினர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப் பரிந்துரை செய்திருந்தது. தமிழ்நாட்டில் மூன்று பெரிய சமுதாயமான கொங்கு வேளாளர், வன்னியர், முக்குலத்தோர், ஆகியோர் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் சமுதாயமாகும். அதில் வன்னியர், முக்குலத்தோர் வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தனர். ஆனால் கொங்கு வேளாளரை மட்டும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.

அதனை தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு வெள்ளக்கோவில் சட்டமன்ற உறுப்பினரான தாத்தா, மிசா சாமிநாதன், தன்னுடன் பலரையும் சேர்ந்துக் கொண்டு அந்தக் கோரிக்கையை முன் வைக்கிறார். 1975ம் ஆண்டு கலைஞர், கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது சமுதாய வரலாற்றில் யாரும் மறக்க முடியாத நிகழ்வாகும். அது தனி மனிதர் சாதனை அல்ல. கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றி.

1972 ஆம் ஆண்டு சென்னை கொங்கு நண்பர்கள் சங்க உறுப்பினர்களான திருவாளர்கள் மின்வாரிய நிர்வாகப் பொறியாளர் அமரர் என். கோவிந்தசாமி இவர் பிறகு சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். பேராசிரியர் மல்லூர் ஜெய சுப்பிரமணியம், காண்ட்ராக்டர் கோவை என் எம் குமாரசாமி, பொறியாளர் கே. நாச்சியப்பன், குடிநீர் வாரிய அதிகாரி குமாரபாளையம் கே . ராமசாமி ஆகியோர் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி அனைவரும் ஒரு குழுவாக இணைந்தனர். எல்லோரும் 26 முதல் 30 வயதினர் என்பதால் அது இளைஞர் குழு என்றாகியது.

அனைவரும் ஓரு நாள் மாலை சென்னை மெரினா கடற்கரை மணலில் அமர்ந்து , கொங்கு வெள்ளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க எம்.எல்.ஏக்களை சந்தித்து பேசுவது என முடிவு செய்தனர். அதன் படி அவர்கள் அனைவரும் சட்டமன்ற கூட்டத் தொடர் நடக்கும் நாட்களில் கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சார்ந்த எம்.எல்.ஏ க்களை தனித்தனியாக சந்தித்து அச்சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அவர்களில் மிகவும் அக்கறை காட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஓட்டன்சத்திரம் எம்.எல்.ஏ திரு.நாச்சிமுத்து அவர்களும் கரூர். எம்.எல்.ஏ திரு. எஸ் நல்லசாமியும் ஆவார்கள்.

பிறகு சென்னை கொங்கு நண்பர்கள் சங்கத்தோடு கலந்து பேசி எம்.எல்.ஏ க்களை சங்க மாதாந்திர கூட்டத்திற்கு அழைத்தனர். எம்.ல்.ஏ க்கள் சங்க கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள். அன்றைய கூட்டத்தின் இறுதியில் ‘கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை பிற்படுத்தபட்டோர் பட்டியலில் சேர்க்க அனைவரும் சேர்ந்து பாடுபடுவோம்’ என்று முடிவு எடுத்தனர். அந்த காலகட்டத்தில்தான் எம்.எல்.ஏ க்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரிடமும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது.

1974 ஆம் ஆண்டில் சங்க மாதாந்திர கூட்டம் ஒன்றில் சட்டக் கல்லூரி இயக்குனராக இருந்த அமரர் பழனிசாமி அவர்கள், “நமது எம்.எல்.ஏ க்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் காரியத்தை தமிழ்நாடு தேர்வாணைய குழு உறுப்பினர் ஒருவர் செய்யும் முடியும்.

கொங்கு வெள்ளாளர் சமூகத்திற்கு தேர்வாணை குழுவில் உறுப்பினர் பதவியோ தலைவர் பதவியோ கடந்த 44 ஆண்டுகளாக தரப்படவேயில்லை. 1929 ஆம் ஆண்டின் ‘மெட்ராஸ் சர்வீஸ் கமிசின்’ சென்னை மாநிலத்திற்கு தனியாக ஏற்படுத்தப்பட்டது. அதை சென்னை தேர்வாணைக் குழு என்றும் பிறகு தமிழ்நாடு தேர்வாணையக் குழு என்றும் பெயர் மாற்றப்பட்டது.

தேர்வாணையக் குழுவில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர்கள் பதவி இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய சமுதாயமான கொங்கு வெள்ளாளருக்கு 1929 ஆம் வருடத்தில் இருந்து 1974 ஆம் வருடம் வரை ஒரு முறை கூட ஒரு உறுப்பினர் பதவி தரப்படவில்லை. தற்பொழுது ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்வரிடம் கேட்க வேண்டும்,” என்று எடுத்துக் கூறினார்.

எல்லோரும் அவரது கருத்தை ஆதரித்தனர். அதன் பிறகு எம்.ல்.ஏ க்கள் முதல்வர் கலைஞர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அன்றைய முதல்வர் கலைஞர் அக்கோரிக்கையை மனமார ஏற்று கொண்டார்.

யார் அப்பதவிக்கு தகுதியானவர்? என்ற கேள்விக்கு சென்னை சங்கமும், இளைஞர் குழுவும் திரு.பழனிசாமி அவர்களின் பெயரையே உச்சரித்து. அதன்படி தமிழ்நாடு தேர்வாணை குழு உறுப்பினராக திரு ஏ. பழனிசாமி அவர்களையே அரசு நியமித்தது. அவர் 26 .06 .1974 அன்று அப்பதவியை ஏற்றுக் கொண்டார். கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தின் 44 ஆண்டுகால கனவு நினைவாகியது. அதன் பிறகுதான் குரூப்-1 தேர்வில் அச்சமுதாயத்தினர் தேர்வாகத் தொடங்கினார்கள்.

பெரும்பாலும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த மக்களுக்கு உயர் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் இடம் கிடைக்க, கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தாத்தா சாமிநாதன் கோரிக்கை வைத்தார்.

கொங்கு வேளாளர் அரசுப் பதவி பெற, உயர்நிலைக் கல்வியில் நுழையவும் அதிக வாய்ப்புக்கள் ஏற்படவில்லை. அதற்கு காரணம் முற்பட்டோர் இனத்தை சார்ந்தவர்களோடு போட்டியிட வேண்டியிருந்தது. இந்த நிலையில்தான் பேராசிரியர் யு.பழனிசாமி அவர்கள், “கொங்கு சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தால் மட்டும்தான் நமக்கு உரிய பலன்கிட்டும்,” என அறிவுரை வழங்கினார்.

அதற்கு அடுத்த கட்டமாக சென்னை கொங்கு நண்பர்கள் சங்கச் செயலாளர் பேராசிரியர் மு. லட்சுமணன் ஏற்பாட்டில் சங்கத் தலைவர் அமரர் திரு. என். மகாலிங்கம் அவர்கள் தலைமையில் அனைத்து எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கோவையில் கொங்கு வேளாளர் மாணவர்கள் மாநில மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது. மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிடிசி நர்சரிப் பள்ளி தாளாளர் அமரர் மு.மாரப்பன் அவர்கள் ஏற்றுக்கொண்டார். இவரது பள்ளியில்தான் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு வந்தது. 23.02.1975ல் கோவையில் மிகப்பெரிய ஊர்வலமும் மாநகராட்சி கலையரங்கில் மாநாடும் நடைபெற்றது.

மாணவர் திரு.மு.ளு.மு.வேல்மணி அவர்கள் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஊர்வலத்திலும் மாநாட்டிலும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். ஊராக வளர்ச்சித் துறை துணை இயக்குனராக பணியாற்றிய கரூர் அமரர் திரு.வையாபுரி கவுண்டர் அவர்களும் தமிழக அரசு சட்டப்பேரவை துணைச்செயலாளர் திரு.சி.கே. இராமசாமி அவர்களும் எல்லா அரசு துறைகளின் புள்ளி விவரங்களையும் சேகரித்து தந்தனர். கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தை சார்ந்தவர்கள் 0.1 அளவில் தான் அரசுப்பணியில் இருந்தார்கள் என்பதும், மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மிகக் குறைவான இடங்களே கிடைத்திருப்பதும் அதன் மூலம் தெரியவந்தது.

மதிப்பிற்குரிய தமிழறிஞர் திரு. சிலம்பொலி செல்லப்பனார் அவர்களின் பங்களிப்போடு விளக்கமான உரை ஒன்றைத் தயாரித்து புள்ளி விபரங்களையும் அதில் இணைப்பாகச் சேர்த்து சிறிய புத்தகமாக அச்சிட்டு கோவை மாநாட்டுக்குத் தரப்பட்டது. மாணவர்கள் மாநாட்டில் கொங்கு வேளாளர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அத்தீர்மானத்திற்கு வலுசேர்க்க, தீர்மானத்தோடு சென்னையில் அச்சிட்டுத் தந்த புள்ளி விபரப் புத்தகத்தையம் இணைத்து மாநாட்டுத் தலைவர் திரு.மு.ளு.மு.வேல்மணிஅவர்கள் தலைமையில் மாணவர்குழுத் முதல்வர் கலைஞரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.அடுத்தக்கட்ட நடவடிக்கையாக எல்லா ஊர்களில் இருந்தும் நமது சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் கலைஞருக்கு அனுப்ப, சென்னை சங்கம் உதவியது. அடுத்து அனைத்துக் கட்சியிலும் உள்ள கொங்கு வெள்ளாளர் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் அனைவரும் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு முதல்வர் கலைஞரிடம் அளித்தனர். அப்பொழுது மாண்புமிகு அமைச்சர் திரு. கண்ணப்பன் அவர்களும் உடனிருந்தார்.

கொங்கு வெள்ளாளர் கோரிக்கை மனுவில் கையெழுத்திட்ட வரலாற்று நாயகர்கள்:
திருவாளர்கள்
1. என். நாச்சிமுத்து ,ஒட்டனசத்திரம் தொகுதி
2. ளு. நல்லுசாமி, கரூர்
3. ஆ. சின்னுசாமி, மொடக்குறிச்சி
4. என்.மு.பழனிசாமி, பெருந்துறை
5. ஆ. சுப்பரமணி,ஈரோடு
6. என். பழனிசாமி, பொங்கலூர்
7. சுப்பரமணியம், சத்தியமங்கலம்
8. ஏ.மு. ராமசாமி ,பவானிசாகர்
9. ளு.ஆ. பழனியப்பன், கோபி
10. யு.ஆ. இராஜா, பவானி
11. அப்பன் பழனிசாமி, வெள்ளகோவில்
12. பி. சண்முகசுந்தரம், பொள்ளச்சி
13. மாணிக்கவாசகம், தொண்டாமுத்தூர்
14. ஊ.ஏ. வேலப்பன்,கபிலர்மலை
15. சின்ன வெள்ளைய கவுண்டர், சேந்தமங்கலம்
16. நைனாமலை, இராசிபுரம்
17. பழனிவேல் கவுண்டர், ஆத்தூர்
18. நு. ஆ. நடராசன், அந்தியூர்
19. மு. முத்துசாமி,வேடச்சந்தூர்
20. குமாரசாமி, பல்லடம்
21. ளு. துரைசாமி, திருப்பூர்
22. செ. கந்தப்பன், திருச்செங்கோடு
23. கோவை செழியன், காங்கயம்
24. அப்துல் ஜபார்,அரவக்குறிச்சி
25. பாவலர் முத்துசாமி எம்.பி., நாமக்கல்
26. மு. கண்ணன் எம்.பி., சேலம்
27. செ. முத்துசாமி எம்.எல்.சி., நாமக்கல்

முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ திரு.அப்துல்ஜபார் அவர்கள் கொங்கு வெள்ளாளர் கோரிக்கைக்கு ஆதரவாக கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு தந்தது மிகவும் பெருமைப்படத் தக்கதாகும்.

1975-ஆம் ஆண்டில் சட்டசபையில் சமூக நலத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடந்தபொழுது கொங்கு வெள்ளாளர் எம்.எல்.ஏ.க்கள் திரு. கோவை செழியன் அவர்களும் திரு. செ.கந்தப்பன் அவர்களும் முதல்வரிடம் நமது கோரிக்கையை ஏற்குமாறு கேட்டுக்கொண்டனர்.

சட்டசபையில் அன்றைய தினம் முதல்வர் கலைஞர் அவர்கள் கொங்கு வெள்ளாளர் கோரிக்கையை ஏற்று கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பதாக அறிவித்து அவர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். கொங்கு வெள்ளாளர் சமுதாயத்தின் 20 ஆண்டுகாலக் கனவு நனவாகியது.

வரலாற்று உண்மைகளை யாரும் மறைக்க முடியாது. வரலாற்றை மாற்றி எழுத 20 ஆண்டு காலம் உருண்டு போனது. அந்த 20 ஆண்டு காலம் கொங்கு வெள்ளாளர் சமுதாயத்திற்கு இருண்ட காலமாகும். 1975ல் முதல்வர் கலைஞரின் அறிவிப்புதான் இருண்டு கிடந்த கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு விடிவெள்ளி ஆனது. அனைத்து உட்பிரிவுகளையும் உள்ளடங்கிய கொங்கு வேளாளர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து தெளிவான அரசாணையாக 16.05.1975 அன்று (பு.ழ.ஆ.ள. ழே 371.னவ.16.05.1975) கலைஞரின் தமிழக அரசு வெளியிட்டது.

அதன் பிறகுதான் கொங்கு வெள்ளாளர் இனத்தவர்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள், மருத்துவம், பொறியியல் போன்ற கல்லூரிகளில் இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைக்க ஆரம்பித்தது. கொங்கு வேளாளர் சமுதாயம் புதிய அத்தியாயம் காணத் தொடங்கியது. ஒரு சமுதாயம் அடுத்த நிலைக்கு முன்னேறி இருக்கிறது. துரதிர்ஷடவசமாக இந்தப் பகுதி மக்கள் வாக்களிக்காமல் தான் கலைஞர் தொடர்ந்து ஆட்சியை பறிகொடுத்தார் என்பதுவும் மிகவும் வருத்தத்திற்குரியது.

கொங்கு வேளாளர் மட்டுமல்ல, தமிழகத்தின் பிற சாதி மக்களுக்கும் இட ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் கிடைக்கச் செய்தவர் கலைஞர். ஒரு மாநில வளர்ச்சிக்கு சமூகநீதி எவ்வளவு முக்கியமானது என்பதை 60-70 களிலேயே உணர்ந்து செயல்பட்டவர் கலைஞர். சமூகநீதியை நிலை நாட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் உறுதியான நிலைப்பாட்டையும் இந்நேரத்தில் நினைவு கூறி நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.

சமூகநீதியைப் பொறுத்தவரை இருவருமே, பெரியாரின் கொள்கைகளை நிறைவேற்றியவர்களாகவே காண்கிறேன்.

கலைஞரின் பயணத்துடன் தொடர்கிறேன்.

– கார்த்திகேய சிவசேனாபதி