பஞ்சமி நில விவகாரம் – தாழ்த்தப்பட்டவர்கள் ஆணையத்தில் திமுக விளக்கம்!

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் முன் வைத்தார். அது தொடர்பான பாஜக பிரமுகரின் புகார் மீதான விசாரணையை தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடத்தி வருகிறது. ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கப்போவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், முரசொலி இடம் குறித்து செய்யப்பட்ட பொய்யான குற்றசாட்டை மறுத்து, திட்டவட்டமாகவும் தெளிவாகவும்
 

திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டை பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் முன் வைத்தார். அது தொடர்பான பாஜக பிரமுகரின் புகார் மீதான விசாரணையை தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடத்தி வருகிறது.

ஆணையத்தின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்கப்போவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது,

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், முரசொலி இடம் குறித்து செய்யப்பட்ட பொய்யான குற்றசாட்டை மறுத்து, திட்டவட்டமாகவும் தெளிவாகவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பிலும், குறிப்பாக கழகத்தின் பொதுக்குழுவிலும் அனைத்து ஆதாரங்களுடனும் ஆவணங்களுடனும் உரிய மன்றங்களில் கோரப்படும் பொழுது சமர்ப்பித்து, முரசொலி நாளிதழ் அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிப்போம் எனத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

இந்நிலையில், முரசொலி நாளிதழ் அலுவலக இடம் குறித்த தவறான – பொய்யான – ஆதாரமற்ற – ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திட்டமிட்டு, அரசியல் உள்நோக்கத்தோடு, பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் எவ்வித முகாந்திரமின்றி கொடுத்த புகாரின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், வருகிற 19.11.2019 அன்று சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின் முன்பு விளக்கம் அளிக்கும்படி கோரியுள்ளது. 

ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் கைப்பற்றிய பணத்தைப் பற்றி இதுவரை விசாரணை ஏதும் நடத்தாத மத்திய பா.ஜ.க அரசு – 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட 560 ரூபாய் குறித்தும் விசாரிக்காத பா.ஜ.க அரசு – தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வீட்டில் ரெய்டு செய்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரிக்காத பா.ஜ.க அரசு – குட்கா விஜயபாஸ்கர் மீது உள்ள 40 கோடி ரூபாய் ஆவணங்கள் குறித்து விசாரிக்காத பா.ஜ.க. அரசு – ஆண்டுகள் பல உருண்டோடியும், இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்கள் குறித்து விசாரணை ஏதும் செய்யாமலும், அதைப் பற்றி கவலை கொள்ளாமலும் கிடப்பில் போட்டுள்ள மத்திய பா.ஜ.க அரசு இதில் மட்டும் தீவிரமாக இறங்கியுள்ளது.

தமிழக மக்கள் மத்தியில் கழகத்தின் மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, பா.ஜ.க பிரமுகர் கொடுத்த புகாரினை, அவசரம் அவசரமாக, உடனடியாக எடுத்து விசாரணைக்கு அழைத்திருக்கும் மத்திய பா.ஜ.க அரசின் கீழ் இயங்கும் தாழ்த்தப்பட்டவர்க்கான ஆணையம் கோரியுள்ள விளக்கத்தினை, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், 19.11.2019 அன்று, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையில் நானும் – கழக வழக்கறிஞர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகி, முரசொலி நாளிதழ் அலுவலகம் இடத்தின்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டுள்ள வீண் களங்கத்தை, உரிய விளக்கங்கள் அளித்து, அதன்மூலம் பொய்யுரைப்போர் – பொல்லாங்கு பேசுவோர் முகமூடியைக் கிழித்தெறிவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

பஞ்சமி நில விவகாரம் திமுகவுக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் விசாரணை இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.

https://www.A1TamilNews.com