கொரொனா நிவாரணத்திற்கு அதிகம் கொடுத்தது ரஜினியா? விஜய்யா? – மோதலில் ரசிகர் பலி!!
கொரொனா நிவாரணத்திற்காக அதிக தொகை கொடுத்தது குறித்து ரஜினி – விஜய் ரசிகர்களுக்கிடையே எழுந்த வாக்குவாதத்தில், விஜய் ரசிகர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தின் மரக்காணத்தைச் சேர்ந்த நண்பர்கள் 22 வயது யுவராஜும் அதே வயதுடைய தினேஷ் பாபுவும் ஆவார்கள். யுவராஜ் கூலித் தொழிலாளி, தினேஷ்பாபு சமையல் தொழிலாளி.
யுவராஜ் தீவிர விஜய் ரசிகர், தினேஷ்பாபு அதி தீவிர ரஜினி ரசிகர். இருவரும் வெவ்வேறு நடிகர்களுக்கு ரசிகர்கள் என்றாலும் நண்பர்களாக இருந்துள்ளனர். ஊரடங்கு நேரத்திலும் எப்படியோ சரக்கு வாங்கி இருவரும் ஒன்றாகக் குடித்து விட்டு நல்ல போதையில் இருந்துள்ளனர்.
அந்த நேரத்தில் இருவருக்குமிடையே கொரோனா நிவாரணத் தொகை அதிகமாகக் கொடுத்து ரஜினியா? விஜய்யா? என்ற வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த தினேஷ் பாபு, யுவராஜை கையால் தாக்கி கீழே தள்ளியுள்ளார். தலையில் படுகாயம் அடைந்த யுவராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தினேஷ்பாபுவை கைது செய்துள்ளனர். எந்த நடிகர் அதிகமாக பணம் கொடுத்தார் என்ற வாக்குவாதத்தில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் மரக்காணம் பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
80 களில் ரஜினி ரசிகர்களும் கமல் ரசிகர்களும் வெளிப்படையாக மோதிக் கொண்ட சம்பவங்கள் நடந்தது உண்டு. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள், எங்கள் ரசிகர்களாகிய நீங்கள் மோதிக் கொள்வது வருத்தமளிக்கிறது, சண்டையிடக் கூடாது என்று இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டு மோதலுக்கு முடிவு கட்டினார்கள்.
தற்போது ரஜினி ரசிகருக்கும், விஜய் ரசிகருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இருவரிடமிருந்தும் இது குறித்த அறிக்கை எதுவும் வருமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.