அமெரிக்கர்களிடம் 1.5 லட்சம் டாலர்கள் அபேஸ்! மாணவர் விசாவில் சென்ற இந்தியர் இப்போது சிறையில்!!
அமெரிக்காவில் புதிதாக வீடு வாங்குபவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு கடனுதவி வழங்கிய நிறுவனத்திலிருந்து பேசுபவர்கள் போல் ஆள் மாறாட்டம் செய்து தவணைத் தொகையை தங்கள் சொந்த கணக்கிற்கு வெஸ்டர்ன் யூனியன், மணிக்ராம் போன்ற பணபரிவர்த்தனை மூலம் அனுப்பி மோசடி செய்துள்ளனர்.
200 அமெரிக்கர்களிடம் நடந்துள்ள இந்த மோசடி மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள், குறிப்பிட்ட நபர்களிடமிருந்து நூதனமாக களவாடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மாணவர் விசாவில் இருக்கும் அனிக்கன் யூசூஃப்கான் பதான் என்ற 29 வயது நபர், இந்தியாவில் உள்ள கும்பலின் தொடர்புடன் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
67 ஃபேக் ஐடிகளைப் பயன்படுத்தி, அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் பகுதியிலுள்ள வடக்கு வர்ஜீனியா பகுதிகளில் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். தனக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்துக் கொண்டு மீதியை இந்தியாவில் உள்ள கும்பலுக்கு வயர் ட்ரான்ஸ்ஃபர் மூலம் அனுப்பியிருக்கிறார்.
அமெரிக்க மத்திய நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் பதானுக்கு ஒராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தொடர்ந்து காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து பணி ஆற்றுவோம் என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.