வங்கியில் 17 மில்லியன் டாலர்கள் மோசடி! குற்றத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்க இந்தியருக்கு 30 வருட சிறைத் தண்டனை?

 

அமெரிக்காவில் பொய்யான ஆவணங்கள் தயாரித்து வங்கியிலிருந்து 17 மில்லியன் டாலர்கள் பணத்தை மோசடி செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் ராஜேந்திர கங்காரியா என்ற தொழிலதிபர்.

மார்பிள் மற்றும் கிரானைட் மொத்த விற்பனையாளராக இருந்த Lotus Exim International Inc. (LEI) என்ற நிறுவனத்தின் தலைவரான ராஜேந்திர கங்காரியா,  அந்த நிறுவனத்தின் ஊழியர்களுடன் சேர்ந்து வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அதன்படி வாடிக்கையாளர்கள் பெயரில் பொய்யான இமெயில் உருவாக்கி வங்கிக்கு தரப்பட்டுள்ளது. வங்கியிடம், லோட்டஸ் நிறுவனத்திற்கு தாங்கள் பணம் தரவேண்டியுள்ளது என்று இந்த போலி மெயில்களிலிருந்து தகவல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய பணத்தின் அடிப்படையில் லோட்டஸ் நிறுவனத்திற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோசடியால் வங்கிக்கு சுமார் 17 மில்லியன் டாலர்கள் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட ராஜேந்திர காங்காரியா,  வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அமெரிக்க மாவட்ட நீதிபதி  சூசன் டி விஜெங்டனிடம் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

வயர் மோசடி குற்றத்திற்காக அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 1 மில்லியன் டாலர்கள் அபராதமும் தண்டனையாக வழங்க வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 18ம் தேதி தண்டனைக்கான தீர்ப்பு வெளிவரும். ராஜேந்திர கங்காரியா குஜராத் எம்.எஸ். பல்கலைகழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ளதாக அவருடைய லிங்க்ட்இன் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

AmericanTamil