ஒன்றிய அரசைப் பார்த்து பயந்துவிட்டார் விஜய்: ‘2000’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கே.ராஜன் காட்டம்

 

ஒன்றிய அரசைப் பார்த்து விஜய் பயந்து போய்விட்டார் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கோ.பச்சையப்பன் தயாரிப்பில் ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2000’. இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. அதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகே தணிக்கை கொடுக்கப்பட்டது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

“பெரிய போராட்டத்துக்குப் பிறகு இந்தப் படத்துக்குத் தணிக்கை வாங்கியதாக இயக்குநர் சொன்னார். இந்தப் படத்தின் மூலம் இந்த நாட்டுக்குப் பாடம் எடுத்துள்ளார். இது மிகப்பெரிய பாடம், புரட்சி. ருத்ரனின் ஆண்மையை, ஆளுமையைத் தவறுகளை எதிர்த்துப் போராடும் குணத்தைப் பாராட்டுகிறேன்.

அந்த குணம் தமிழ்த் திரையுலகில் அனைவருக்கும் வேண்டும். முதலில் தயாரிப்பாளர், இயக்குநருக்கு இருந்தால் அனைவரையும் ஆட்டிப் படைக்கலாம். சுமார் 12 மணி நேரத்துக்கு விஜய்யை மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டார்கள். ‘மெர்சல்’ படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து ஒரு சின்ன விமர்சனம். அது பெரிதாக இல்லை.

ஆனால், விஜய் பேசியதால் பெரிதாகிவிட்டது. உடனே, விஜய்யை ஏதேனும் செய்தால் சினிமா உலகமே பயப்படும் என்பதால் நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை அவர்களுடைய காரில் அழைத்துவந்தார்கள். பின்பு வீடு முழுக்க சோதனை செய்துவிட்டு ஒன்றுமில்லை என்றார்கள். ஒன்றுமில்லை என்று சொல்வதற்கா இவ்வளவு கொடுமை செய்தீர்கள்?

அதற்குப் பிறகு விஜய் தனது படங்களில் ஒன்றிய அரசை விமர்சித்துப் பேசுவதே கிடையாது. ஏனென்றால், விஜய் அவ்வளவு பயந்து போய்விட்டார். அவர் கோடீஸ்வரர். எவன் ஒருவன் அளவுக்கு அதிகமாகப் பணம் சேர்த்து வைத்துக் கொள்கிறானோ, அவனுக்கு ஆண்மை போய்விடுகிறது. கொடுமைகளைக் கண்டு எதிர்க்கும் தன்மை போய்விடுகிறது. எவன் தவறு செய்தாலும் அதை எதிர்க்கும் தன்மை எங்களைப் போன்ற ஏழைகளால் முடியும். பணக்காரர்களால் முடியவே முடியாது.

'2000' படத்தைச் சித்ரவதை செய்த தணிக்கைக் குழுவினரை வன்மையாகக் கண்டிக்கிறேன். அம்பேத்கர் படத்தைப் போடக் கூடாது என்று சொல்ல இவர்கள் யார்? கடவுள் பெயரைச் சொல்லக் கூடாது என்று சொல்ல அவர்கள் யார்?” என பேசினார்.