இயக்குனராவது தான் நா.முத்துக்குமாரின் கனவு! சீமான் சொல்லும் புதிய தகவல்!!

நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய சீமான், இருவருக்குமான நட்பு பற்றி விரிவாக கூறியுள்ளார். மேலும், இயக்குனர் ஆவது தான் முத்துக்குமாரின் கனவு என்ற புதிய தகவலையும் பகிர்ந்துள்ளார். கவிஞர் நா. முத்துக்குமாரின் 45வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது. “பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே எங்களோடு நெருக்கமானவன் முத்து. அறிவுமதியின் அறையில் நாங்களெல்லாம் ஒன்றுகூடுவோம். அந்த சமயத்தில் வந்த இலக்கியங்கள், பாடல்கள் குறித்து அக்குவேறு ஆணி வேறாக
 

நா.முத்துக்குமாரை பாடலாசிரியராக தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய சீமான், இருவருக்குமான நட்பு பற்றி விரிவாக கூறியுள்ளார். மேலும், இயக்குனர் ஆவது தான் முத்துக்குமாரின் கனவு என்ற புதிய தகவலையும் பகிர்ந்துள்ளார்.

கவிஞர் நா. முத்துக்குமாரின் 45வது பிறந்த நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது.

“பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே எங்களோடு நெருக்கமானவன் முத்து. அறிவுமதியின் அறையில் நாங்களெல்லாம் ஒன்றுகூடுவோம். அந்த சமயத்தில் வந்த இலக்கியங்கள், பாடல்கள் குறித்து அக்குவேறு ஆணி வேறாக அலசுவான். அவனது தந்தை தமிழாசிரியர் என்பதால் இலக்கிய ஆர்வம் சிறிய வயதிலேயே அவனுக்கு அதிகமிருந்தது. “பட்டாம்பூச்சி விற்பவன்’ கவிதைத் தொகுப்பு அவனுக்கு பலரின் பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தது.

அதேபோல அவன் எழுதிய தூர் கவிதையை இலக்கியக் கூட்டம் ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா சிலாகித்துப் பேச, அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது அந்த கவிதை. கவியரங்க மேடைகளிலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு தன் கவிதைகளால் பலரின் கவனத்தையும் இளம் வயதிலேயே ஈர்த்தவன் முத்து.

ஒரு கட்டத்தில் அவனை தனது உதவி இயக்குநராக சேர்த்துக்கொண்டார் பாலுமகேந்திரா. அவனது கனவு இயக்குநர் ஆவதுதான் என்பது பல பேருக்கு தெரியாது. பாலுமகேந்திரா அழைக்கிறார் என்கிற விசயத்தை முதன் முதலிலில் எங்களிடம்தான் பகிர்ந்துகொண்டான் முத்து. அவரிடம் 4 வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்தான். அறிவுமதி அறையும் எனது வீடும்தான் முத்துவுக்கு எப்போதும் வேடந்தாங்கல்.

கல்லூரிவிட்டதும் அவன் நேராக வருவது என்னுடைய வீடு அல்லது அறிவுமதியின் அறையாகத்தான் இருக்கும். ஐந்துகோவிலான், சீனு ராமசாமி எல்லோரும் ஒன்றாகத்தான் இருந்தோம். ஒன்றாகவேதான் சமைத்துச் சாப்பிடுவோம். அப்படி ஒரு நெருக்கமான உறவும் நட்பும் கலந்தது அது.

அப்படி ஓடிக்கொண்டிருந்த நாட்களில், ‘வீரநடை’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த சமயத்தில் ஒருமுறை எல்லோரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, “முத்து, இந்த படத்துல பாட்டு எழுதேன்” என நான் சொல்ல, “வேணாம்னே” என அவன் சொல்ல, “இல்லை இல்லை நீ எழுதறே” என எல்லாரும் வலியுறுத்தினோம். சரி என ஒப்புக்கொண்டதும் பாட்டுக்கான சூழலை சொன்னேன்.

ஒரு சாதாரணமான கிராமத்துப் பொண்ணு. அவளுக்கு பல விசயங்களில் பிரமிப்பு இருக்கும், பல விசயங்கள் புடிச்சிருக்கும். அவளுக்கு என்ன என்ன புடிக்கும்ங்கிற மாதிரி பாட்டு வரிகள் இருக்கணும்னு சொன்னேன். அவன் பெயரிலேயே பாட்டை ஆரம்பிச்சான் தம்பி. “முத்து முத்தா பூத்திருக்கும் முல்லைப் பூவ புடிச்சிருக்கு” என்கிற அந்த பாட்டு எல்லோரையும் கவர்ந்தது.

பாட்டு முழுக்க ஹைக்கூ படிமத்திலேயே எழுதியிருப்பான். மிகவும் ரசனையாக இருக்கும் அந்த படிமம். ‘காதல் தோல்விதானோ ஆட்டுத்தாடி புடிச்சிருக்கு, நட்சத்திரம் கால் பதிக்கும் வாத்துக்கூட்டம் புடிச்சிருக்கு’ என போகும் அந்தப் பாடலின் வரிகள். இந்தப் பாடலை எந்த நேரமும் எல்லோரும் பாடிக்கொண்டே இருப்போம். இசையமைப்பாளர் தேவாவிடம் ஒருமுறை பாடிக்காட்டியபோது மெய்சிலிர்த்துப்போனார்.

அடுத்தடுத்து, இயக்குநர்கள் வசந்த், ரவிக்குமார், செல்வராகவன், வசந்தபாலன் என பலரும் வாய்ப்புகளைத் தர, புகழ் ஏணியின் உச்சத்துக்கு விரைந்து சென்றான் முத்து. பல பாடல்கள் அவனுக்கு தனித்த அடையாளத்தைத் தந்தன. மிக மிக எளிய நடையில் அவன் எழுதிய ‘தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்’, ‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’, ‘பூக்கள் பூக்கும் தருணம்’, ‘கண் பேசும் வார்த்தைகள்’, ‘நினைத்து நினைத்துப் பார்த்தேன்’, ‘முதல் மழை எனை நனைத்ததே’, ‘உனக்கென இருப்பேன்’, ‘முன் பனியா முதல் மழையா’, ‘அனல் மேலே பனித்துளி’ போன்ற நூற்றுக்கணக்கான பாடல்கள் நவீன காதலின் அடையாளமாக இருக்கின்றன.

ஒவ்வொரு பாடல் எழுதி முடித்ததும், அதை என்னிடம் வாசித்துக் காட்டி, ‘எப்படிண்ணே இருக்கு?’ என என் கருத்தை கேட்பதில் அவனுக்கொரு ஆனந்தம். புகழின் உச்சிக்கு அவன் சென்றுகொண்டிருந்த போதும், ஒரு முறைகூட அவனுக்கு தலைக்கனம் ஏற்பட்டதில்லை. பாட்டெழுதி எவ்வளவு சம்பாதித்தாலும் முடிந்த அளவு மற்றவருக்கு உதவுவதில் அவனிடம் சலிப்பை பார்த்ததில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்வதில் மன நிறைவு அடையற மனுசன் அவன்.

கணக்குப் பார்த்து உதவுபவன் அல்ல. உதவியதை திருப்பிக் கேட்கும் பழக்கமும் அவனிடத்தில் இருந்ததில்லை. அப்படியொரு உயர்ந்த பண்பாட்டிற்கு சொந்தக்காரனாக இருந்தான். ஆடம்பர வாழ்க்கையை வெறுத்தவன். வாசிப்புப்பழக்கம் அவனை எப்போதும் ஆக்ரமித்திருக்கும். உலக இலக்கியங்கள், உலகத் திரைப்படங்கள் குறித்து அவனது பார்வை வேறுவிதமாக இருக்கும். அவைகளை படித்து என்னிடம் விவாதிக்கும் போதும் தர்க்கம்புரியும்போதும் தமிழ் இலக்கியங்கள் மீது அவனுக்கிருந்த அசைக்க முடியாத காதலை புரிந்துகொள்ள முடிந்தது.

தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், நான் ஊரில் இருந்தால் நேரில் வந்து வாழ்த்துப்பெற்றுச் செல்வான். ஊரில் இல்லையெனில், தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துப்பெறுவான். அவனது இந்த பிறந்தநாளில் அவன் இல்லை என நினைக்கிறபோதே வார்த்தைகளால் விவரிக்கமுடியாத தக்கை ஒன்று, தொண்டையை அடைத்துக்கொள்கிறது,” என்று சீமான் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com