நோட்டா விமர்சனம் #NotaReview

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின், நாசர், சத்யராஜ் ஒளிப்பதிவு: சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரன் இசை: சாம் சிஎஸ் தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன் இயக்கம்: ஆனந்த் சங்கர் தமிழ் சினிமாவில் நீண்டநாள் கழித்து வந்திருக்கும் ஒரு முழு அரசியல் படம் ‘நோட்டா’. படம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கும் அரசியல் இறுதிக் காட்சிவரை தொடர்கிறது. சில காட்சிகள் சுவாரஸ்யம், பல காட்சிகள் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமே என்கிற ரகம். ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்கவும் தனது ஆஸ்தான சாமியாரின் ஜோதிடத்தை நம்பியும்
 

நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின், நாசர், சத்யராஜ்

ஒளிப்பதிவு: சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரன்

இசை: சாம் சிஎஸ்

தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்

இயக்கம்: ஆனந்த் சங்கர்

தமிழ் சினிமாவில் நீண்டநாள் கழித்து வந்திருக்கும் ஒரு முழு அரசியல் படம் ‘நோட்டா’.

படம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் ஆரம்பிக்கும் அரசியல் இறுதிக் காட்சிவரை தொடர்கிறது. சில காட்சிகள் சுவாரஸ்யம், பல காட்சிகள் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமே என்கிற ரகம்.

ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்கவும் தனது ஆஸ்தான சாமியாரின் ஜோதிடத்தை நம்பியும் அரசியலே தெரியாத தன் ஒரே மகன் விஜய்யை முதல்வராக்குகிறார் நாசர். ஒரு விபத்தாக முதல்வர் பதவிக்கு வரும் விஜய் ஒரு கட்டத்தில் மக்கள் போற்றும் ‘ரவுடி சிஎம்’ஆக மாறுகிறார். இதற்கிடையில் ஊழல் வழக்கிலிருந்து விடுதலை பெற்று வீடு திரும்பும் வழியில் நாசரை கொள்ள சதி நடக்கிறது. அதில் சிக்கும் நாசர் பலத்த அடிபட்டு கோமாவில் கிடக்கிறார். சில தினங்களுக்குப் பிறகு அவருக்கு நினைவு திரும்புகிறது. மகனை எப்படியாவது முதல்வர் பதவியிலுருந்து இறக்கி விட்டு தனது அடியாளை அந்தப் பதவிக்கு கொண்டு வர முயற்சிக்கிறார். நாசரை கொள்ள முயன்றது யார்? விஜயை பதவியிலிருந்து நாசரால் நீக்க முடிந்ததா? என்பது மீதிக் கதை.

ஜெயலலிதா சிகிச்சை, கண்டைனரில் பணம் கடத்தல், ஆர் கே நகர் இடைத்தேர்தல், பனாமா லீக்ஸ், வாரிசு அரசியல், 2015 பெரு வெள்ளம், கூவத்தூர் கூத்துகள் என தமிழ்நாட்டின் சமகால அரசியல் நிகழ்வுகள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை.

விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ்த் திரைப்படம். ஆள் பார்க்க துடிப்பாக இருந்தாலும் உணர்ச்சிகரமான காட்சிகளில் தடுமாற்றம் தெரிகிறது. பேருந்து எரிப்பில் குழந்தை பலியாகும்போதும், மழை வெள்ளத்தைச் சமாளிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் மகள் சூழ்ச்சி செய்து எடுக்கும் போதை வீடியோவை புத்திசாலித்தனமாக ஒன்றும் இல்லாமல் செய்யும் காட்சி கைதட்ட வைக்கிறது.

நஸ்ரியாவின் ஜெராஸாக வரும் மெஹ்ரின்தான் ஹீரோயின் என்கிறார்கள் ஆனால் அப்படி எந்த அறிகுறியும் தெரியவில்லை. இன்னொரு முக்கிய பெண் பாத்திரத்தில் வரும் சஞ்சனா நடராஜன் எரிச்சல் ஊட்டுகிறார்.

சத்யராஜ், நாசர், அந்த டி ஜி பி யாக வருபவர், எம் எஸ் பாஸ்கர் எல்லோருமே கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

அந்த விபத்துக்குப் பிறகு நாசருக்கு ஏன் அத்தனை கேவலமான மேக்கப். அந்த மேக்கப் இல்லாமல் இருந்தாலும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. இடைவேளைக்குப் பின் வரும் காட்சியில் சத்யராஜுக்கு எதற்காக அத்தனை பெரிய பிளாஷ்பேக்? அதை வெட்டி எரிந்திருந்தாலும் கதை ஓட்டத்திற்கு எந்த பாதிப்பும் வந்திருக்காதே. படத்தில் மருந்துக்கும் நகைச்சுவை இல்லை. ஒரு அரசியல் படம் என்றால் வசனங்களில், காரசாரம், நக்கல், நையாண்டி ரொம்ப முக்கியம். அது இந்த படத்தில் மிஸ்ஸிங்.

ஒளிப்பதிவாளர் சந்தான கிருஷ்ண ரவிச்சந்திரனுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லை. சென்னை வெள்ளம் தொடர்பான காட்சிகள் அனைத்தும் பழைய வீடியோ என அப்பட்டமாகத் தெரிகிறது.

படத்தில் மூன்று பாடல்கள், அதில் அந்த போதைப் பாடலின் வரிகள் மட்டும் கவனிக்க வைக்கின்றன. சாம்ஸ் சி எஸ் பின்னணி இசை காட்சிகளின் வேகத்துக்கு கைக்கொடுக்கிறது.

அரசியல் படம் என்பதற்காக ‘நோட்டா’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் தலைப்பிற்கும் படத்திற்கும் தொடர்பே இல்லை.

இயக்குநர் ஆனந்த் சங்கர் திரைக்கதை வசனத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால் ‘நோட்டா’விற்கு மெஜாரிட்டி கிடைத்திருக்கும்!

Rating: 2.5/5.0