நடிகைகள் ரகுல் பிரீத் சிங் - சார்மியிடம் விசாரணை

 

நடிகை சார்மியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

தெலுங்கு திரையுலகில், போதைப்பொருள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார், கடந்த 2017-ம் ஆண்டு சோதனை நடத்தினர். பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தில், பிரபல டைரக்டர் பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே.நாயுடு, நடிகர்கள் தருண், நவ்தீப், ரவி தேஜா, நடிகைகள் சார்மி கவுர், முமைத்கான் உள்பட 12 பேருக்கு போதைப்பொருள் பயன்படுத்தியதில் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இந்த வழக்கில், 62 பேரிடம்  விசாரணை நடைபெற்றது. மொத்தம் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பல கோடி ரூபாய் ஹவாலா பணம் கைமாறி இருக்கலாம் என்பதால் அமலாக்கத் துறை தனியாக விசாரணை நடத்தியது. இதில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதாக சந்தேகித்த அமலாக்கத்துறை, தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில் 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை இப்போது சம்மன் அனுப்பி உள்ளது. நடிகைகள் ரகுல் பிரீத் சிங், ராணா, ரவிதேஜா இயக்குனர் புரி ஜெகநாத், நடிகை சார்மி உள்ளிட்ட பலருக்கு இந்த சம்மன் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நடிகை சார்மி, அமலாக்கத்துறை முன்பு நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அதுபோல்  நடிகை ரகுல் பிரீத் சிங் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.