எனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு... காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த சார்லி!

 

தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு இருப்பது தொடர்பாக போலீசில் நடிகர் சார்லி புகார் அளித்துள்ளார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக 500-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிகர் சார்லி நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சார்லியின் பெயரில் ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் “இந்த ட்விட்டர் உலகில் உங்கள் அனைவருடனும் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்ற பதிவு வெளியாகியிருந்தது. இதை வைத்து பலரும் சார்லியின் ட்விட்டர் கணக்கை பின்தொடர தொடங்கினார்கள்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு இன்று வந்த சார்லி, தனது பெயரில் போலியாக ட்விட்டர் கணக்கு தொடங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார்.

 இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சார்லி கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது, “கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றிவரும் நான் எந்த ஒரு சமூக வலைதளங்களிலும் இல்லை என்பதைத் தாழ்மையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதியின்றி போலி ட்விட்டர் கணக்கு துவங்கி இருக்கிறார்கள். இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிகப் பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.