சாயம் இசை வெளியீட்டு விழா: தமிழ்நாட்டு முதல்வருக்கு கோரிக்கை வைத்த ஆர்.வி.உதயகுமார்

 

இசை வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆர்.வி.உதயகுமார் ஒரு கோரிக்கையை வைத்தார்.

ஒயிட் லேம்ப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சாயம்’. இப்படத்தில் விஜய் விஷ்வா, சைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார்.

படிக்கும் மாணவர்கள் மீது சாதிச் சாயம் பூசுவதால் நாயகன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி ‘சாயம்’ படம் உருவாகியுள்ளது.

இதன் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் எஸ்.ஏ.சி, ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது, “சாதி வேண்டாம் என்றுதான் நானும் பல நாட்களாகக் கோரிக்கை வைத்து வருகிறேன். பள்ளி விண்ணப்பங்களில் சாதி பற்றியே கேட்கக் கூடாது என ஒரு மசோதாவைத் தாக்கல் செய்துவிட்டால் போதுமே. ஆனால், அதைச் செய்ய முடியாமல் சிலர் தடுக்கிறார்கள்.

நானும் ‘சின்னக்கவுண்டர்’ போல சாதிப் பெயரில் படம் எடுத்தவன்தான். ஆனால் எந்த சாதியையும் தூக்கிப் பிடிக்கவில்லை. யாரையும் தாழ்த்தியும் பேசவில்லை. இதுபோன்ற சமூக நோக்கில் எடுக்கப்படும் சிறு படங்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை.

இங்கே பேசிய இயக்குநர் சாய்ரமணி சொன்னதுபோல, கடந்த ஆட்சியில் அம்மா திரையரங்கம் என ஒரு திட்டம் பேசப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது.

இந்த ஆட்சியில் அதைக் கலைஞர் திரையரங்கம் என்கிற பெயரிலாவது செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சிக்குச் சிறிய அளவிலான தியேட்டர்களைக் கட்டித்தர வேண்டும். சிறு பட தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோரிக்கை வைக்கிறேன்” என பேசினார்.