பொன்மகள் வந்தாள்! பொருள் என்ன தந்தாள்?

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நடிப்பில் சொர்க்கம் படத்தில் வந்த ஆலங்குடி சோமு எழுதிய ”பொன்மகள் வந்தாள்” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதே பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ரிமிக்ஸ் செய்ய, அழகிய தமிழ் மகன் படத்தில் நடிகர் விஜய்யும் நடித்தார். பின்னர் இதே பெயரில் இரண்டு ஆண்டுகளாக தொலைக்காட்சி மெகா சீரியல் ஒன்றும் வந்தது. தற்போது நடிகர் சூர்யா தயாரிப்பில் அவருடைய மனைவி ஜோதிகா நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது பொன்மகள் வந்தாள். தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக
 

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் நடிப்பில் சொர்க்கம் படத்தில் வந்த ஆலங்குடி சோமு எழுதிய ”பொன்மகள் வந்தாள்” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. இதே பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் ரிமிக்ஸ் செய்ய, அழகிய தமிழ் மகன் படத்தில் நடிகர் விஜய்யும் நடித்தார்.

பின்னர் இதே பெயரில் இரண்டு ஆண்டுகளாக தொலைக்காட்சி மெகா சீரியல் ஒன்றும் வந்தது. தற்போது நடிகர் சூர்யா தயாரிப்பில் அவருடைய மனைவி ஜோதிகா நடிப்பில் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது பொன்மகள் வந்தாள்.

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே முதன் முதலாக ஓடிடி தளத்தில் வெளியான படம் என்ற பெருமையுடன் அமேசான் பிரைம் மூலம் உலகமெங்கும் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

அமேசான் பிரைம் கணக்கு உள்ளவர்களுக்கு இந்தப் படத்திற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்பது முக்கியமானது. அதாவது அமேசான் பிரைம் கணக்குக்காக ஏற்கனவே செலுத்திய பணத்தில் புத்தம் புது திரைப்படத்தை இலவசமாக பார்க்க முடிந்தது.

80 களில் “விதி” என்ற படம் தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெல்லாம் கூட சக்கை போடு போட்டது. அந்தப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு நீதிமன்றக் காட்சிகளே இடம் பெற்றிருக்கும். அதற்காகவே பரபரப்பாகப் பேசப்பட்ட படம் விதி. படத்தின் வசனங்களும் ரேடியோ மற்றும் கிராமப்புற சவுண்ட் சர்வீஸ் மூலம் ஒரிரு ஆண்டுகள் வலம் வந்து கொண்டிருந்தது.

விதி படத்திற்குப் பிறகு நீதிமன்றக் காட்சிகள் படம் முழுக்க நிறைந்திருப்பது பொன்மகள் வந்தாள் தான். பெத்துராஜாக வரும் பாக்யராஜின் கலகலப்புடன் தொடங்கும் படத்தில் ஜோதிகா எண்ட்ரி வந்ததும் ஒரு இருக்கம் ஏற்படுகிறது. பாக்யராஜ் அவ்வப்போது கலகலப்பு ஊட்டினாலும் உருக்கமான காட்சியிலும் அவருக்கே உரித்தான ட்ரேட் மார்க்குடன் அசத்துகிறார். ஜோதிகா ஏன் சோகமே உருவான வடிவமாக இருக்கிறார் என்ப்தற்கான காரணம், நீதிமன்ற காட்சிகளுடன் நகரும் படத்தின் கதையோட்டத்தில் மெல்ல மெல்ல வெளிப்படுகிறது.

விதி படத்தில் அப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான கே.பாலாஜி( நடிகர் மோகன் லாலின் மாமனார்) நீதிபதியாக அமர்ந்திருப்பார். கிட்டத்தட்ட அதே தோற்றப் பொலிவு போல் இருக்கிறது பிரதாப் போத்தனின் வேடம். உடன் வரும் பாண்டியராஜனின் கேரக்டர் உண்மையிலேயே தேவைதானா அல்லது திணிக்கப்பட்டதா என்ற கேள்விகள் படம் முழுக்கவும் உடன் பயணிக்கிறது.

வில்லன் தியாகராஜன், ஜோதிகாவை மிரட்டும் காட்சியில் நெஞ்சை பதற வைக்கிறார். மற்றபடி பழைய ரஜினியின் பாயும்புலி படத்தில் “எனக்கும் அது தான் டேடி தெரியல்லே” என்று வசனம் பேசிய அதே அப்பாவி வில்லன் தான். கேடுகெட்ட பிள்ளையின் அப்பா என்பதைத் தவிர அவர் நல்லவர் தானோ என்று கூட தோன்ற வைக்கிறார் இயக்குனர்!

ஜோதிகாவுக்கு சவால் விடுப்பது இயக்குனர், நடிகர் ஆர்.பார்த்திபன் தான். அவருடைய வரவுக்குப் பிறகு காட்சிகளில் சூடு பிடிக்கிறது. குருநாதர் பாக்யராஜை மடக்கிக் கேள்வி கேட்கும் காட்சியில் குருவை மிஞ்சி விடுகிறார்.

பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் என குரு சிஷ்யர்கள் ஒரே காட்சியில் தோன்றுவது தமிழ்த் திரைப்படத்தில் அரிதிலும் அரிதானது தான். ஐந்து இயக்குனர்களில் மனதில் நிற்பது என்னவோ பாக்யராஜும் பார்த்திபனும் தான். 

படம் முழுக்க ஜோதிகா இரண்டு மாறுபட்ட வேடங்களில் வருகிறார். படத்தின் மூலம் அவர் பார்வையாளர்களின் மனதில் மிகவும் முக்கியமான கருத்தை பதிய வைப்பதில் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லலாம். அம்மா அப்பாவித் தனமும் ஆவேசமும் ஜோதிகாவின் நடிப்பில் பளிச்சென வெளிப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் சொல்லும் காட்சி பதற வைக்கிறது. ஜுனியர் வழக்கறிஞராக சறுக்கல்களை சமாளித்து நீதியை நிலைநாட்டுவதில் ஒரு நடுத்தரக் குடும்பப் பெண்ணாக மிளிர்கிறார்.

ஆசிபா, நந்தினி என்ற பெயர்களை ஜஸ்ட் லைக் தட்டாக கடந்து செல்லாமல், நடுத்தர வர்க்கம் தங்கள் வீட்டில் பாடமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைச் சொல்வதில் இயக்குனருக்கு வெற்றி. 

சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்து அந்த ரத்தக்காட்சிகள் தேவைதானா இயக்குனரே?இதற்கெல்லாம் டெக்னாலஜியை உபயோகித்து குரூரத்தை குறைத்திருக்கலாமே! ரத்தத்தைப் பார்த்தால் தான் நம் மக்களின் மூளையில் உரைக்கும் என்று எண்ணி விட்டாரோ இயக்குனர்?.

இறுதிக் காட்சியில் வெண்பா, ஏஞ்சல் திருப்பம் ஆழமானதாகவும் இல்லை. புதுமையாக நினைத்துபடமாக்கிய விதமும் குழப்புவதாகவே உள்ளது. அதை கட் செய்து க்ளைமாக்ஸை மாற்றி அமைக்கலாமா என்று கூட யோசிங்க!

ஊரடங்கு காலக்கட்டத்தில் தொலைக்காட்சி சீரியல்களுக்கு பிரேக் விடப்பட்டுள்ள நிலையில், சீரியல் பார்க்கும் நேரத்தில் ஒவ்வொரு குடும்பமும் பார்க்கக்கூடிய, பார்க்க வேண்டிய வகையில் ஓடிடி தளத்தில் வந்திருப்பதே பொன்மகள் வந்தாளின் சிறப்பு எனலாம்.

பொன்மகள் வந்தாள்.. நடுத்தர சாமானிய குடும்பங்கள் செய்ய வேண்டிய  சில கடமைகளைச் செவ்வனே நினைவூட்டியுள்ளாள்!

A1TamilNews.com