இணையத்தில் லீக்கான ‘தளபதி 66’ கதை.. மன நோயால் பாதிக்கப்பட்டவராக நடிக்கும் விஜய்?

 

விஜய் நடிக்கும் ‘தளபதி 66’ படத்தின் கதை இதுதான் என ஒரு கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக நிர்மல், கலை இயக்குநராக கிரண் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்புக்கள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. மீதமுள்ள பகுதிகளை படமாக்க படக்குழு மீண்டும் ஜார்ஜியா செல்ல உள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கை முடித்து விட்டு, அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, தோழா படத்தை இயக்கிய வம்சி பைடிபள்ளி தான் ‘தளபதி 66’ படத்தை இயக்கி போகிறார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. விஜய் முதல் முறையாக இரு மொழிகளில் நடிக்கும் படம் இதுவாகும். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் நடிக்கும் ரோல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச திரைப்படங்கள் பற்றிய விபரங்களை வெளியிடும் ஐஎம்டிபி இணையதளத்தில் தான் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதாவது ‘தோழா’ படத்தில் கழுத்திற்கு கீழ் எந்த பாகங்களும் செயல்படாத பக்கவாதம் போன்ற நோயால் பாதிக்கப்பட்டவராக நாகர்ஜுனாவை காட்டி இருப்பார் வம்சி. அதே போல் இந்த படத்திற்கு, மற்றொரு விநோத நோயால் பதிக்கப்பட்டவராக விஜய்யை காட்ட போகிறார்களாம். ‘ஈரோட்டோமேனியா’ என்ற நோயால் பாதிக்கப்பட்டவரை பற்றியது தான் படத்தின் கதை என கூறப்பட்டுள்ளது.

எரோடோமேனியா என்பது ஒரு அரிய மனநோயாகும். இந்த மன நோயால் பாதிக்கப்பட்ட நபர் தன்னை யாரோ அல்லது தீவிரமாக காதலிக்கிறார் என்று நினைத்து கொள்வார்களாம். யாரும் தன்னை காதலிக்காத போதே அப்படி ஒரு எண்ணத்தில் உறுதியாக இருப்பார்களாம்.

அந்த மாதிரியான நோய் பாதிக்கப்பட்ட நபராக தான் ‘தளபதி 66’ படத்தில் விஜய் நடிக்கிறார் என கூறப்படுகிறது. ‘தளபதி 66’ திரைப்படம் ரொமான்ஸ், காமெடி மற்றும் சென்டிமென்ட் நிறைந்த ஒரு அருமையான படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில் இது தான் படத்தின் கதையா என்பதை டைரக்டர் வம்சி தான் விளக்க வேண்டும். டிசம்பர் மாதத்திற்கு பிறகு தளபதி 66 பற்றிய அப்டேட்கள் வரிசையாக வெளியிடப்படும் என ஏற்கனவே டைரக்டர் வம்சி கூறி விட்டதால், கதை பற்றிய தகவலுக்கும் அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.