எலான் மாஸ்க்கிடம் வேலை பார்ப்பது இதயத்திற்கு நல்லதல்ல.. டெஸ்லா துணை தலைவர் திடீர் ராஜினாமா!
டெஸ்லா நிறுவனத்தில் துணை தலைவராக இருந்த ஸ்ரீலா வெங்கடரத்னம் திடீரென தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சிஇஓவாக உள்ளார். எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனம் உலக அளவில் முன்னணியில் உள்ளது. டெஸ்லா கார் உற்பத்தி நிறுவனத்தின் துணை தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீலா வெங்கடரத்னம், கடந்த 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவரது வருகைக்கு பின் ஆண்டு வருமானம் கணிசமாக உயர்ந்தது.
இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தின் துணை தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஸ்ரீலா வெங்கடரத்னம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தன்னுடைய லின்கிடுன் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஸ்ரீலா வெங்கடரத்னம் நிறுவனத்தில் தன்னுடைய பதவிக்காலம் அசாதாரணமானது என கூறியுள்ளார். நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து பெருமை அடைவதாக கூறியுள்ள அவர் தற்போது 700 மில்லியன் டாலர் கொண்ட நிறுவனமாக டெஸ்லா உருவாகி இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனத்தை பொருத்தவரை அங்கே துணை தலைவராக இரண்டு பெண்கள் மட்டுமே பதவி வகித்து வந்தனர். அவர்களில் ஸ்ரீலா வெங்கட்ரத்தினமும் ஒருவர். தற்போது அவர் அந்த பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.
டெஸ்லா வருடாந்திர வருமானம் 100 பில்லியன் டாலர்களை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம், சந்தை மதிப்பு 700 பில்லியன் டாலர்களை எட்டிய ஒரு நிறுவனம் மற்றும் ஒரு வருடத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான கார்களை டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்தில் துணை தலைவராக இருந்து இருக்கிறேன் என்பது மிகப் பெருமிதமாக இருக்கிறது. நாங்கள் அனைவரும் கூட்டாக எவ்வளவு சாதித்து இருக்கிறோம் என்பதை பார்க்கும்போது பிரம்மிப்பாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீலா வெங்கடரத்னத்தின் பதிவிற்கு டெஸ்லாவின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியான ஜேசன் வீலர் கருத்து பதிவிட்டுள்ளார். டெஸ்லாவில் வேலை செய்வது எளிமையானது கிடையாது, ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள் எனக் கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள வெங்கட்ரத்னம் நிச்சயமாக டெஸ்லா நிறுவனம் சவால்களை விரும்பாதவர்களுக்கான நிறுவனம் கிடையாது எனக் கூறியுள்ளார்.