எஸ்கலேட்டரில் சிக்கிய பெண்.. துண்டாக கால்கள்.. தாய்லாந்தில் அதிர்ச்சி சம்பவம்!!
தாய்லாந்தில் பெண் ஒருவர் ஏர்போர்ட்டில் நகரும் நடைபாதையில் செல்லும் போது அவரது கால்கள் அதில் சிக்கி துண்டான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள டான் முயாங் சர்வதேச விமான நிலையத்தில் நகரும் நடைபாதையில் சிக்கி தாய்லாந்து பெண் தனது இடது காலின் ஒரு பகுதியை இழந்தார். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை காலை நடந்துள்ளது. அங்கு இரண்டாவது உள்நாட்டு முனையத்தின் கேட் 4 மற்றும் கேட் 5 இடையே உள்ள தெற்கு காரிடாரில் உள்ள நகரும் நடைபாதையில் இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தால் காலை இழந்த பெண்ணின் அடையாளத்தை அதிகாரிகளால் வெளியிடப்படவில்லை. அந்த பெண் நகோன் சி தம்மரத் மாகாணத்திற்கு விமானத்தில் செல்ல இருந்தார். அவர் சூட்கேஸ் மீது தடுமாறி விழுந்ததாகவும், அப்போது அவரது கால் நகரும் நடைபாதையில் சிக்கி இழுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கால் நடைபாதையில் சிக்கிய நிலையில், அந்த பெண் கதறித் துடித்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த விமான நிலைய மருத்துவ ஊழியர்கள் அந்த பெண்ணுக்கு முதலுதவி கொடுத்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அந்த பெண் சாய் மாய் மாவட்டத்தில் உள்ள பூமிபோல் அதுல்யதேஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டான் முயாங் சர்வதேச விமான நிலைய இயக்குநர் கருண் தனகுல்ஜீரபட், “நடைபாதை பெல்ட்டின் கீழ் சூட்கேஸ் சக்கரங்களும் கிடந்தன. அதை நாங்கள் எடுத்துள்ளோம். அந்த நடைபாதை தினசரி ஆய்வு செய்யப்படு வருகிறது. விபத்து குறித்துக் கூடுதல் தகவல்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த பயணிக்குத் தேவையான மருத்துவச் செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை ஏர்போர்ட் நிர்வாகம் ஏற்றுக் கொள்ளும்” என்றார்.
இந்த விபத்துக்குப் பிறகு, விமான நிலையத்தில் உள்ள அந்த நகரும் நடைபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. அதில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், பொறியியல் வல்லுநர்கள் நாடு முழுக்க ஏர்போர்டுகளில் இருக்கும் நகரும் நடைபாதை மற்றும் எஸ்கலேட்டர்களை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தால், உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.