உயிருடன் பூமிக்கு திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்..? வெளியான அதிர்ச்சி தகவல்

 

சுனிதா வில்லியம்ஸ் சென்ற விண்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பே தீப்பற்றி எரிய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையம் அமைத்து பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்து வருகின்றது. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் வீராங்கனைகள் அவ்வபோது விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22-ம் தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த பிரச்சனையால் 50 நாட்களுக்கும் மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார்.

போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் என்பது 210 நாட்கள் வரை விண்வெளியில் இருக்கக்கூடிய ஒரு விண்கலம் ஆகும். பின்பு அது தானாகவே பூமிக்கு திரும்பி தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்வெளியில் சிக்கியுள்ள வீரர்கள் பூமிக்கு திரும்புவதில் உள்ள 3 சிக்கல்கள் குறித்து அமெரிக்க ராணுவ விண்வெளி அமைப்புகளின் முன்னாள் தளபதி ரூடி ரிடோல்ஃபி பேசியுள்ளார்.

பூமிக்கு விண்கலம் பாதுகாப்பாக இறங்குவதை உறுதி செய்ய ஸ்டார் லைனர் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். அதில் ஏதேனும் தவறு ஏற்பட்டால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம். 1. 96 மணி நேர ஆக்சிஜன் விநியோகத்துடன் விண்வெளியில் விண்கலம் சிக்கிக் கொள்ளலாம். 2. விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் முயற்சி தோல்வியடையலாம். 3. விண்கலம் செங்குத்தான கோணத்தில் வளிமண்டலத்தில் நுழைந்தால் தரைப்பகுதியை அடைவதற்கு முன்பே தீப்பற்றி எரிந்து வீரர்கள் உயிரிழக்க நேரிடலாம் என்று தெரிவித்தார்.