நாளை அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு.. ஏற்கனவே 7 கோடி வாக்குகள் பதிவு.. களம் யாருக்கு சாதகம்?

 

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், சுமார் 7 கோடி பேர் வாக்களித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முடிய உள்ள நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (நவ. 5) நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (60) போட்டியிடுகிறார்.

மொத்தம் 16 கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் சுமார்  7 கோடிக்கும் அதிகமானோர் தபால் வாக்கு, வாக்குப் பெட்டி உள்ளிட்ட வசதிகள்  மூலம்  முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர்.

எஞ்சியவர்கள் 50 மாகாணங்களில் நாளை வாக்களிக்க உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும். இழுபறி ஏற்படாவிட்டால் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரத்திலேயே அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பது தெரிந்துவிடும்.

தற்போதைய நிலவரப்படி கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு 49 சதவீதம் ஆதரவு தெரிவித்துள்ளனர். டிரம்புக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதிபர் தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் இரண்டு நாட்களில் ஓரளவு விடை தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.