இஸ்ரேலுக்கு எதிராக தீவரமடைந்த மாணவர்கள் போராட்டம்.. அமெரிக்காவில் 2 ஆயிரம் மாணவர்கள் கைது!

 

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கடந்த 16 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 பேர் கொன்று குவிக்கப்பட்டதுடன், 250 பேர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டு காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.

இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொதுவெளியில் நடந்த போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து, கல்வி நிறுவனங்களுக்கும் பரவி உள்ளன. இதனால் பிரபல பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் போராட்டக்களமாக மாறி உள்ளன.

காசாவில் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் எனவும், இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்த வேண்டும் எனவும், போரினால் பலனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

இதற்கிடையே சுமார் 30 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 18-ந்தேதி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் போது 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் உள்ள கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

போராட்டத்தை தடுக்க பல்கலைக்கழகங்களில் கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புளோரிடா உள்ளிட்ட சில பகுதிகளில் போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். மேலும் சில இடங்களில் போலீசார் வன்முறையை கையாள்வதாகவும், போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த போராட்டங்கள் தொடர்பாக அமெரிக்கா முழுவதும் இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன் விவகாரத்தை ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கையாளும் விதம் அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அங்குள்ள தனியார் செய்தி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜோ பைடன், “அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் காழ்ப்புணர்ச்சி, வன்முறை, வெறுப்பு பேச்சு மற்றும் பிற குழப்பங்களுக்கு அமைதியான போராட்டத்தில் இடம் கிடையாது. கருத்து வேறுபாடுகள் காரணமாக சீர்குலைவு ஏற்படக்கூடாது” என்று தெரிவித்தார்.