அமெரிக்க அதிபர் தேர்தல்.. மீண்டும் விவாதத்திற்கு ஓகே சொன்ன கமலா ஹாரிஸ்.. பின்வாங்கிய டிரம்ப்

 

முன்னாள் அதிபர் டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த முயற்சி செய்து வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (78) போட்டியிடுகிறார். அதே சமயம், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (81) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் வயோதிகம் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என சொந்த கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்புகள் வலுத்தன. பின்னர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகினார்.

அதனை தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் (59) அறிவிக்கபட்டார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா உள்பட, கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு தெரிவித்தனர். 

இவர்கள் இருவருக்கும் இடையேயான முதல் நேரடி விவாதம் கடந்த 10-ம் தேதி நடந்தது. பல்வேறு விவகாரங்களில் இருவருக்கும் இடையில் அனல்பறக்கும் விவாதம் நடந்தது. இந்த விவாதத்தில் டிரம்பை விட கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

இதனிடையே சிஎன்என் தொலைக்காட்சி விடுத்த அழைப்பை ஏற்று வரும் அக்டோபர் 23-ம் தேதி கமலா ஹாரிஸ் மீண்டும் டொனால்ட் டிரம்புடன் விவாதம் நடத்த சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த விவாதத்தில் டிரம்ப் பங்கேற்பார் என தாம் நம்புவதாகவும் கமலா ஹாரிஸ் சமூகவலை தள பதிவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் விவாதத்தில் பங்கேற்கமாட்டேன் என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன்படி “நவம்பர் 5-ம் தேதி நடக்க உள்ள அதிபர் தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்கள் தயாராகி விட்டனர். இரண்டாவது விவாதம் மிகவும் தாமதமாகிவிட்டது” என்று கூறியுள்ள டிரம்ப் அழைப்பை நிராகரித்துள்ளார்.